கொடைரோடு : சபரிமலை பக்தர்களின் வருகையால் கொடைரோட்டில் பழங்கள் வியாபாரம் ஜோராக நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழ வணிக மையங்களில் கொடைரோடு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. சுற்றுப்பகுதியில் விளையும் பழங்கள் மட்டுமின்றி, கொடைக்கானல் பகுதியில் சாகுபடியாகும் பழங்களும் இங்கு விற்கப்படுகின்றன. முன்னதாக அனைத்து நாட்களிலும் கனிசமான அளவில் இருந்த வணிக, பண புழக்கம் இருந்தது. தற்போது பஸ் போக்குவரத்து குறைந்துள்ளதால் பின் தங்கியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொடைக்கானலுக்கான போக்குவரத்தில் கொடைரோட்டிற்கு தனி மவுசு உண்டு. திண்டுக்கல்--மதுரை நான்கு வழிச்சாலையால், 98 சதவீத புறநகர் பஸ்கள் புறக்கணிக்கின்றன. அதனால் கொடைரோட்டில் பழ வியாபாரத்தை மட்டுமே முக்கிய தொழிலாக மேற்கொண்டு வந்த நுாற்றுக்கணக்கானோர் பாதித்துள்ளனர். வெளியூர் சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்து விட்டது. சபரிமலை சீசன், தைப்பூச பாதயாத்திரை போன்ற விழாக்காலங்களில் மட்டுமே, பழ வியாபாரம் ஓரளவு கைகொடுக்கிறது. இந்தாண்டு சபரிமலை சீசன், ஐயப்ப பக்தர்களின் வருகையால் பழங்கள் விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE