மஹா., முதல்வராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (31)
Advertisement
மஹா., முதல்வர், உத்தவ் தாக்கரே, பதவியேற்பு, மும்பை, பலத்த பாதுகாப்பு, சிவாஜி பார்க்

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வராக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று(நவ.,28) பதவியேற்கிறார். இதையொட்டி, விழாநடக்கும் மும்பை, 'சிவாஜி பார்க்' மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள, 288 தொகுதிகளில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி, 161 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இதில் பா.ஜ., 105 தொகுதிகளிலும், சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளிலும், காங்கிரஸ், 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில், பா.ஜ., - சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டு, கூட்டணி உடைந்தது. யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பின், காங்கிரஸ், தேசியவாத காங்., ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க, சிவசேனா முயற்சித்தது. இது தொடர்பாக, மூன்று கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில், ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், தேசியவாத காங்., சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த அஜித் பவார், பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, 23ல், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவி ஏற்றார்; துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றார்.


மனு தாக்கல்:


இது, சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி, அவசர அவசரமாக வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்தும், பட்னவிஸ் அரசு, உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரியும், உச்ச நீதிமன்றத்தில், மூன்று கட்சிகளும் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், '27ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், எம்.எல்.ஏ.,க்களை பதவி ஏற்க வைத்து, பட்னவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; இதை, 'டிவி'க்களில் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்' என, 26ம் தேதி உத்தரவிட்டது.

ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரங்களில், துணை முதல்வர் அஜித் பவார், தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், தேவேந்திர பட்னவிசும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சிவசேனா தலைமையிலான, 'மகா விகாஸ் அஹாதி' எனப்படும், மஹாராஷ்டிரா மேம்பாட்டு முன்னணி, ஆட்சி அமைக்க உரிமை கோரியது. மாநில கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து, ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழங்கினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க, உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.

இதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் முதல்வராக, உத்தவ் தாக்கரே, இன்று மாலை, 6:40 மணிக்கு பதவியேற்கிறார். மும்பை தாதர் பகுதியில் உள்ள, சிவாஜி பார்க் மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது.உத்தவ் தாக்கரேவுடன், சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரசைச் சேர்ந்தவர்களும் அமைச்சராக பதவியேற்பர் என தெரிய வந்துள்ளது.


'அமைதி காக்கும் பகுதி'


சிவசேனாவுக்கு, சிவாஜி பார்க் மைதானம் மிகவும் ராசியான மைதானம். இந்த மைதானத்தில் தான், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, தசரா விழாவின் போது ஆவேசமாக பேசுவது வழக்கம். இந்த மைதானத்தின் ஒரு ஓரத்தில் தான், பால் தாக்கரேவின் உடல்தகனம் செய்யப்பட்டது. இந்த இடத்தை, சிவசேனா தொண்டர்கள், மிகவும் புனிதமான இடமாக கருதுகின்றனர். சிவாஜி பார்க் மைதானத்தில், பொது நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்த தடை விதித்து, மைதானத்தை, 'அமைதி காக்கும் பகுதி' என, மும்பை உயர் நீதிமன்றம், 2010ல் அறிவித்தது.

எனினும், மாநில அரசும், மும்பை மாநகராட்சியும், ஆண்டுதோறும், 45 நாட்கள் பொது நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்தன. இந்நிலையில், இந்த மைதானத்தில், இன்று பதவியேற்பு விழா நடக்கிறது. இதையொட்டி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றில், 'சிவாஜி பார்க் மைதானம், விளையாட்டு மைானமா அல்லது பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமா' என, கேட்கப்பட்டிருந்தது.பிரார்த்தனை:


இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் தர்மாதிகாரி, சாக்லா ஆகியோர் கூறியதாவது: நாங்கள், பதவியேற்பு விழா நடப்பது பற்றி எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அசம்பாவிதங்கள் நடக்க கூடாது என, பிரார்த்திக்கிறோம். இதுபோன்ற பொது நிகழ்ச்சிகள், அந்த மைதானத்தில் தொடர்ந்து நடக்க கூடாது என, கேட்டு கொள்கிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளில், போலீசார் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். விசாரணை, டிச., 12க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பதவியேற்பு விழா நடக்க உள்ளதையடுத்து, சிவாஜி பார்க் மைதானத்தில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது பற்றி போலீசார் கூறுகையில், 'பாதுகாப்பு பணியில், சீருடை மற்றும் சீருடை அணியாத போலீசார் ஈடுபடுத்தப்படுவர், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாகவும், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாகவும், கூட்டத்தினர் கண்காணிக்கப்படுவர்' என்றனர்.


285 எம்.எல்.ஏ.,க்கள்:


உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மஹாராஷ்டிரா சட்டசபையின் சிறப்புக் கூட்டம், நேற்று நடந்தது. பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ., காளிதாஸ் கோலம்பர், தற்காலிக சபாநாயகராக, நேற்று முன்தினம் பதவி ஏற்றார். புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு, கோலம்பர் நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபைக்கு வந்த அஜித் பவாரை, அவரின் சகோதரியும், தேசியவாத காங்., - எம்.பி.,யுமான சுப்ரியா சுலே வரவேற்று அழைத்துச் சென்றார்.

தேசியவாத காங்., மூத்த தலைவர்கள் அஜித் பவார், சக்கன் புஜ்பல், காங்., தலைவர்கள் அசோக் சவான், பிரிதிவிராஜ், முன்னாள் சபாநாயகர் வல்சே பாட்டீல், பா.ஜ.,வின் ஹரிபாகு பாகடே உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள், முதலில் பதவி ஏற்றனர். அதன்பின், தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனும், சட்டசபைக்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டவருமான ஆதித்ய தாக்கரே பதவியேற்றதும், அவருக்கு அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

மொத்தம் உள்ள, 288 எம்.எல்.ஏ.,க்களில், தற்காலிக சபாநாயகர், மற்ற இருவரைத் தவிர, 285 பேர் நேற்று பதவியேற்றனர். இற்கிடையே, முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ள, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தன் மனைவி ராஷ்மியுடன், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை, மரியாதை நிமித்தமாக நேற்று காலை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.


புறக்கணிக்கிறார் ராகுல்?


பதவியேற்பு விழாவில் பங்கேற்க, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், சிவசேனா அழைப்பு விடுத்துள்ளது. எனினும்,முக்கிய தலைவர்கள் பலர், விழாவில் பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது. காங்., முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.,யுமான ராகுல், விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சிவசேனாவுடன், காங்., கூட்டணி அமைக்கும் விவகாரத்தில், ராகுல் ஆர்வம் காட்டாமலேயே இருந்தார். இந்த விவகாரத்தில், அவர், இது வரையிலும் தன் கருத்தை தெரிவிக்கவில்லை. மேலும், கடந்த லோக்சபா தேர்தலின் போது, ராகுலை, உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். 'நாங்கள் தேசத்துக்காக கூட்டணி அமைத்துள்ளோம்; நீங்கள் பதவிக்காக கூட்டணி அமைத்துள்ளீர்கள்' என, ராகுலை உத்தவ் விமர்சனம் செய்தார். சட்டசபை தேர்தலின் போதும், காங்கிரசை, உத்தவ் கடுமையாக விமர்சனம் செய்தார். சிவசேனாவுடன் கைகோர்ப்பதை, ராகுல் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதனால், பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ராகுல் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
28-நவ-201916:41:28 IST Report Abuse
Endrum Indian திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி வாழ்க வாழ்க என்று சொல்வது போல் ஆகப்போகின்றது மஹாராஷ்ட்ராவில் ராவண சேனாவின் ஆட்சி. அச்சு அசலாக திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் ராணுவ சேனாவின் குண்டர்கள் அப்படியே ஒரு சதவிகிதம் வித்தியாசமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Saai sundaramurthy. A.V.K - chennai,இந்தியா
28-நவ-201915:50:27 IST Report Abuse
Saai sundaramurthy. A.V.K சிவசேனாவும் மற்றும் தேசியவாத காங்கிரஸும் துரோகி கட்சிகள் என்று புரிகிறது. மக்கள் ஆதரவை பெற்ற பாஜகவுக்கு வேண்டுமென்றே திட்டம் போட்டு துரோகம் செய்திருக்கிறார்கள். கூட்டு கொள்ளை அடிக்க காங்கிரஸும் தயாராகி விட்டது. உச்ச நீதிமன்றம் ஒன்றை புரிந்து கொண்டதா? இல்லையா? என்று தெரியவில்லை. மக்கள் வாக்களித்தது பாஜக-சிவசேனை கூட்டணிக்கு தான். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு அல்ல. சிவசேனாவின் வெற்றியில் பாஜகவினரின் வாக்குகளும் உள்ளன. அவ்வாறு இருக்கையில் கூட்டணி தருமத்தை மீறி பலமில்லாத மாற்று கூட்டணியினருடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைப்பது என்பது மக்களுக்கு இழைக்கும் நம்பிக்கை துரோகம். ஆகவே, நீதிமன்றம் மறு தேர்தலுக்கு உத்தரவிடாமல் அந்த துரோக கூட்டணியினருக்கு ஆட்சி அமைக்க உத்தரவிடுவது என்பதை மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். துரோக கூட்டணியினருக்கு மக்களின் சாபம் தான் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
28-நவ-201915:36:38 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பதவி வெறியால் பால் தாக்கரேயின் புகழுக்கு அவர் மகன் களங்கம் ஏற்படுத்திய நாள் , கருப்பு நாள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X