அஜித் பவாருக்கு மீண்டும் துணைமுதல்வர் பதவி?| Dinamalar

அஜித் பவாருக்கு மீண்டும் துணைமுதல்வர் பதவி?

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (51)

மும்பை : மஹாராஷ்டிராவில் இன்று (நவ.,28) பதவியேற்க உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில், தேசியவாத காங்.,ன் அஜித்பவாருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அஜித் பவார் இன்று பதவியேற்க மாட்டார் என கூறப்படுகிறது.





மஹாராஷ்டிராவில் நீண்ட அரசியல் குழப்பத்தில் பிறகு, முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று மாலை 6.40 மணிக்கு பதவியேற்க உள்ளார். சிவாஜி பார்க்கில் நடக்கும் இந்த பதவியேற்பு விழாவிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழா பிரம்மாண்டமாக இருந்தாலும், உத்தவ் தாக்கரேவுடன் ஒரு சிலர் மட்டுமே அமைச்சராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனவும், டிச.,3 ம் தேதிக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. சிவசேனா, தேசியவாத காங், காங்., கட்சிகள் இடையே 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்.,ன் பிரபுல் பட்டேல், தேசியவாத காங்.,க்கு துணை முதல்வர் பதவியும், சபாநாயகர் பதவி காங்.,க்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.





சமீபத்தில் பா.ஜ.,வின் தேவேந்திர பட்நாவிசுடன் இணைந்து துணை முதல்வராக பதவியேற்று, பின் ராஜினாமா செய்த அஜித் பவாருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்க தேசியவாத காங்., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. துணை முதல்வர் பதவிக்கு அஜித் பவார் மற்றும் ஜெயந்த் பட்டேல் ஆகியோரின் பெயர்களை தேசியவாத காங்., கட்சியின் தலைவரான சரத் பவார் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக 3 கட்சிகளின் கூட்டணி இந்த முடிவை எடுத்திருப்பதாக கதகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X