பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : நவ 28, 2019
Advertisement

சாலையோர புதரால் பொதுமக்கள் அச்சம்: சங்ககிரி, கோட்டவருதம்பட்டி ஊராட்சி, வளையசெட்டிப்பாளையத்திலிருந்து, வடுகப்பட்டி சாலை இருபுறமும், சீமைக்கருவேல முட்செடிகள், அதிகளவில் வளர்ந்து, பாதி சாலை வரை நீண்டுள்ளது. இதனால், அந்த வழியாக, இரவில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். சாலையிலும், பரவலாக மணல் குவியல் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். விஷ ஜந்துக்களும் உலா வருவதால், அச்சத்துடன் மக்கள் செல்லும் அவலம் தொடர்கிறது.
பராமரிப்பின்றி கட்டடம் வீண்: மேட்டூர் தாலுகா அலுவலகம் எதிரே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. அதில் இயங்கிய, குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சில ஆண்டுக்கு முன், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின், பொதுப்பணித்துறையினர் கட்டடத்தை புதுப்பித்து, வேறு அரசு துறைக்கு வாடகைக்கு விட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சுற்றிலும் புதர் மண்டி, கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. அதனால், உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மண்மேட்டால் மக்கள் தடுமாற்றம்: மேட்டூர், பொன்னகர் பிரிவு அருகே, இ.எஸ்.ஐ., மருத்துவமனை வளாகம் உள்ளது. தொடர் மழையால், அதன் சுற்றுச்சுவர் சமீபத்தில் இடிந்து விழுந்து, சாலையில் ஓடிய வெள்ள நீர், மருத்துவமனை வளாகத்தில் புகுந்தது. அதை தடுக்க, சுற்றுசுவர் இடிந்த பகுதியில், மண்ணை குவித்துள்ளனர். இதனால், சாலையின் ஒரு பகுதி மண்மேடாக காட்சியளிப்பதால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். அதனால், மண்மேட்டை அகற்றி, இடிந்த சுற்றுச்சுவரை கட்டுவது அவசியம்.

பள்ளி அருகே சீரழிந்த சாலை: சங்ககிரி, தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, கிடையூரில் இருந்து, வேலம்மாவலசு செல்லும் சாலையை, தினமும், ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், உறைவிடப்பள்ளி அருகே, சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்கள், அடிக்கடி பஞ்சராகி நிற்பதால், இரவில் வரும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுப்பது அவசியம்.

புதர் மண்டிய சுகாதார வளாகம்: ஆத்தூர், புதுப்பேட்டை, காதர்பேட்டை வழியாக செல்லும் நீரோடை பகுதியொட்டி, நகராட்சி சார்பில், மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் சமுதாயத்தினர், அந்த வளாகத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், கட்டட வெளிப்புறம், முட்புதர் மண்டியுள்ளதால், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், கழிவு கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X