ஆத்தூர்: ''முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரத்தில், தி.மு.க., தொடர்ந்த, மான நஷ்டயீடு வழக்கை எதிர்கொள்ள, பா.ம.க., தயார்,'' என, அக்கட்சி தலைவர் மணி தெரிவித்தார்.
ஆத்தூரில், பா.ம.க., பொதுக்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில், நேற்று நடந்தது. அதில், ஆத்தூர் அரசு மருத்துவமனையை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தல்; ஆத்தூரில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தொடங்குதல்; வசிஷ்ட நதியில், மேட்டூர் அணை உபரி நீரை திறந்துவிடுதல் என்பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, பா.ம.க., தலைவர் மணி அளித்த பேட்டி: தி.மு.க.,வின் முரசொலி அலுவலக, 'பஞ்சமி நிலம்' குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறிய பின்னரும், மூலப்பத்திரம் வெளியிடவில்லை. அதை, தி.மு.க., தலைமை வெளியிட முன்வரவேண்டும். மான நஷ்டயீடு கேட்டு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், அந்த வழக்கை எதிர்கொள்ள, பா.ம.க., தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடுகிறோம். தேவையான 'சீட்' பெற்று, அ.தி.மு.க., கூட்டணி அபார வெற்றி பெறும். தலைவாசல் ஆட்டுப்பண்ணையில், கால்நடை பூங்கா அமைப்பதால், அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில், இடஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளது. அப்பட்டியலை, வாரியம் திரும்பபெறவேண்டும். மேலும், முதுகலை தமிழாசிரியர், பொருளாதார ஆசிரியர் பட்டியல் வெளியிடவில்லை. சரியான இடஒதுக்கீட்டில் பட்டியலை வெளியிடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.