அரக்கோணம்: பள்ளிக்கு சரியாக வராத தலைமை ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடியில், ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 110 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக புவியரசு, 45, மற்றும் ஆசிரியையாக செல்வகுமாரி ஆகியோர் மட்டும் பணியாற்றி வந்தனர். இதில், தலைமை ஆசிரியர் புவியரசு, பள்ளிக்கு சரியாக வருவதில்லை. இதனால் ஆசிரியை செல்வகுமாரி மட்டும், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் நடத்தி வந்துள்ளார். இது குறித்து பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டித்து, கடந்த, 19ல் மாணவர்களும், பெற்றோரும் பள்ளியை பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, கல்வித்துறையினர் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியர் புவியரசு மாதம் ஒரு நாள் மட்டும் பள்ளிக்கு வந்து, அனைத்து நாட்களும் வந்ததாக கையெழுத்து போட்டு விட்டு, சம்பளம் பெற்றுச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, தலைமை ஆசிரியர் புவியரசை, சஸ்பெண்ட் செய்து, அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் முத்துதமிழ்பாண்டியன் நேற்று உத்தரவிட்டார்.