அரூர்: அரூர், வாணியாற்றில், சாக்கடை கழிவுநீர் கலப்பதால், மாசடைந்து வருவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காடுவில், வாணியாறு அணை கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அணை நிரம்பும் போது, அதிலிருந்து, திறந்து விடப்படும் உபரி நீர், வாணியாறு வழியாக சென்று, இறுதியில் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. அவ்வாறு, ஆற்றில் தண்ணீர் செல்லும்போது, கரையோரம் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் அரூர் நகரில், குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இந்நிலையில், அரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், சாக்கடை கழிவு நீர் அனைத்தும் வாணியாற்றில் கலந்து வருகிறது. இவற்றுடன், குப்பை, ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், வாணியாறு மாசடைந்து வருவதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், வாணியாற்றை பாதுகாக்கும் வகையில், அரூர் நகரில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர், வாணியாற்றில் கலப்பதை தடுக்க, டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.