கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், இரு சக்கர வாகனங்களில் செல்வோரை மடக்கி, மொபைல்போனை பறிக்கும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து, ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சூளகிரி வரை, 25 கி.மீ., தூரம் ஆறு வழி சாலையாக உள்ளது. இதன் பல இடங்களில், மேம்பாலம் மற்றும் முக்கிய பிரிவு சாலைகள் உள்ளன. இதன் வழியாக இரு புறங்களிலும் உள்ள கிராமங்களுக்கு, இரு சக்கர வாகனங்களில் பலர் சென்று வருகின்றனர். இந்த சாலையில் கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் மற்றும் பெங்களூருக்கு, தினந்தோறும் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். கடந்த ஆறு மாதமாக, இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், பிரிவு சாலை மற்றும் மேம்பால பிரிவு சாலைகளில் செல்ல, வாகனத்தின் வேகத்தை குறைக்கும்போது, பல்சர் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வரும் இளைஞர்கள், அந்த வாகனத்தை வழிமறித்து, வாகன ஓட்டிகளிடமிருந்து மொபைல்போனை பறித்துக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் குறுகலான சாலையில் தப்பி செல்கின்றனர். மேலும், மொபைல்போனை உடனடியாக 'சுவிட் ஆப்' செய்து விடுகின்றனர். இது குறித்து, தேசிய நெடுஞ்சாலையோரமுள்ள கிருஷ்ணகிரி தாலுகா, குருபரப்பள்ளி, சூளகிரி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தால், ஏற்கெனவே, இதுபோன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று, போலீசார் அலட்சியமாக பதில் கூறி திருப்பி அனுப்புகின்றனர். நெடுஞ்சாலையில், போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, மொபைல் கொள்ளையர்களின் அட்டகாசத்தை அடக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.