திருப்பூர்: மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளிடம், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பூமலுார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கம்மாள், 75, மற்றும் அவரது தங்கை தங்கம்மாள், 70. இருவருக்கும் தலா, இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு, திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.சகோதரிகள் இருவருக்கும், உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதனால், மருத்துவச் செலவுக்காக, சேர்த்து வைத்திருந்த பணத்தை, தங்களது மகன்களிடம் கொடுத்தனர். அதைப் பார்த்த மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.காரணம், அவர்கள் கொடுத்த, 46 ஆயிரம் ரூபாயும், மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 500 - 1,000 ரூபாய் என்பது தான். தாங்கள் சேமித்த பணம் செல்லாமல் போனது குறித்து, மூதாட்டிகள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதையறிந்த கலெக்டர் விஜயகார்த்திகேயன், சம்பந்தப்பட்ட மூதாட்டிகளிடம், விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதன்படி, பல்லடம் வருவாய் துறையினர், மூதாட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.