புதுடில்லி:'மஹாராஷ்டிராவில், ஜனநாயகத்தை சீர்குலைக்க, பா.ஜ., முயற்சித்தது; சிவசேனா, காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுப்பதற்கும் சதி வேலையில் ஈடுபட்டது; இது, வெட்கக்கேடான விஷயம்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆவேசமாக பேசினார்.காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டில்லியில் நடந்தது.
சதி வேலை
இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்ததுமே, கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி யின் நடவடிக்கை, முன் எப்போதும் நடந்திராத வகையில் இருந்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிவுறுத்தல்களின் படி, அவர் செயல்பட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேர்தலுக்கு முன், சிவசேனாவுடன், பா.ஜ., கூட்டணி அமைத்திருந்தது. ஆனால், பா.ஜ., தலைவர்களின் அகம்பாவம், அதீத நம்பிக்கை ஆகிய வற்றின் காரணமாக, கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறியது. மஹாராஷ்டிராவில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., ஆட்சி அமைக்க முயன்றபோது, அவற்றை தடுப்பதற்காக, பா.ஜ., சதி வேலைகளில் ஈடுபட்டது. ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சித்தது.ஆனால், உச்ச நீதிமன்றத்துக்கு சென்று, நியாயம் கேட்டோம். இதில், மோடி, அமித் ஷா ஆகியோரது நடவடிக்கைள் அம்பலம் ஆனது.
காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகளும் இணைந்து, பா.ஜ.,வின் சதிச் செயல்களை முறியடிப்போம். பா.ஜ., அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்கு, மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை. நாட்டின் வளர்ச்சி குறைந்து விட்டது. வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. முதலீடே இல்லை. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. ஏற்றுமதி குறைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக, மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்காமல், புள்ளி விபரங்களை மாற்றுவதிலும், உண்மையான செய்திகளை வெளியிடாமல் தடுப்பதிலுமே, மோடி - அமித் ஷா அரசு கவனம் செலுத்துகிறது. பொதுத்துறை நிறுவனங்களை, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் இறங்கிஉள்ளனர்.
இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நிலை என்னவாகும் என்பதை கூட, ஆட்சியாளர்கள் சிந்திக்கவில்லை. வங்கிகளில், தங்கள் சேமிப்பை வைத்து உள்ள மக்கள், கலக்கம் அடைந்துள்ளனர்.
குழப்பம்
வட கிழக்கு மாநிலங்களில், தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கைகளை துவக்கி, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். தேர்தல் பத்திர மோசடி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு நீக்கம், எதிர்க்கட்சிகளை உளவு பார்ப்பது என, மத்திய அரசு செய்யும் தவறுகளின் பட்டியல் அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE