புதுடில்லி :முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ல், வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. இதற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, கடந்த ஆகஸ்ட் 21ல், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
பின், அவர் டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது. தள்ளுபடிஆனால், அதே வழக்கில், பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையினர், சிதம்பரத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. சிதம்பரம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று ஆஜராகி, வாதிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:இந்த வழக்கில், சிதம்பரம் அப்பாவி அல்ல. பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவது, நாட்டின் பொருளாதாரத்தை மட்டும் பாதிப்பதில்லை. நம் சட்டதிட்டங்களின் மீது, மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் அது சிதைத்துவிடுகிறது.சிதம்பரத்திற்கு, 12 வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு இருப்பதும், 12 நாடுகளில் சொத்துக்கள் இருப்பதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ஆவணங்கள்இந்நிலையில், அவருக்கு ஜாமின் வழங்குவது, வழக்கு விசாரணையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.சாட்சிகள் மிரட்டப்படுவதற்கும், ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.மேலும், இந்த வழக்கு விசாரணை தொடர்பான முக்கிய ஆவணங்களை, சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு, அமலாக்கத்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.'கார்த்தியை கைது செய்ய காத்திருக்கிறோம்!'அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்றத்தில் நேற்று கூறியதாவது:ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரத்தின் மகன் கார்த்தி, ஏற்கனவே முன் ஜாமின் பெற்றுள்ளார். அவரை கைது செய்ய, டில்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அந்த தடை விலக்கப்பட்ட பின், அவரை கைது செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.உச்ச நீதிமன்றத்தில், துஷார் மேத்தா இந்த கருத்தை தெரிவித்தபோது, கார்த்தியும் நீதிமன்ற அறைக்குள் இருந்தார்.