தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் செயல்பாட்டில் இருந்தும், சீரமைக்கப்படாமல் உள்ள, 82 ஆயிரத்து, 635 நீர் நிலைகளின் தற்போதைய நிலவரம் குறித்து, ஆய்வு செய்யும் பணியை, தமிழக அரசு முடுக்கி விட்டு உள்ளது.
தமிழகத்தில், பருவ மழை அடுத்தடுத்து ஏமாற்றியதால், சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.குடி மராமத்து திட்டம்தாகம் தீர்க்கும் குடிநீருக்காக, மக்கள் பல கி.மீ., அலைந்து திரிந்தனர். நீர்நிலைகளை சீரமைக்காததே, இதற்கு முக்கிய காரணம். 'களமிறங்குவோம்; நமக்கு நாமே' என, நீர் நிலைகளை சீரமைக்க மக்களே களமிறங்கினால் தான், தீர்வு காண முடியும் என, நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிட்ட துடன், விழிப்புணர்வு கட்டுரைகளும் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும், நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில், ஆர்வமுடன் களமிறங்கினர். மக்களின் எழுச்சியை பார்த்து, தமிழக அரசும், நீர்நிலை களை சீரமைக்க, தன்னார்வ அமைப்புகளுக்கு தடையின்றி அனுமதி அளித்தது. மேலும், நீர்நிலைகளை சீரமைக்கும் குடி மராமத்து திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில், 84; நகராட்சி நிர்வாகத்துறை கட்டுப்பாட்டில், 38; பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில், 1,674, ஹிந்து சமய அறநிலையத்துறையில், ஒன்பது; பேரூராட்சிகளில் ஒன்று என, தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 1,806 நீர் நிலைகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
அரசு உத்தரவு
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு ஆவணங்கள் அடிப்படையில், தமிழகத்தில், 90 ஆயிரத்து, 48 நீர்நிலைகள் உள்ளன. ஐந்தாண்டுகளில், 5,607 ஏரி, குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.தற்போது, 1,806 ஏரி, குளங்களை சீரமைக்கும் பணிகள், மக்கள் பங்கேற்புடன் நடந்து வருகின்றன. மீதமுள்ள, 82 ஆயிரத்து, 635 ஏரி, குளங்களின் நிலவரம் குறித்து, ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளில் மக்கள் பயன்பாட்டில் உள்ளவை, படுமோசமான நிலையில் உள்ளவை, பராமரிப்பு தேவைப்படுபவை என, வகைப்படுத்தி, பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சி துறை, சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள் துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகளை, தமிழக அரசு அறிவுறுத்திஉள்ளது.இதையடுத்து, கள ஆய்வு பணிகளை சம்பந்தப்பட்ட துறைகள் முடுக்கிவிட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE