உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள்! : தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்துங்கள்! : தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

Updated : நவ 29, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (2)
Share
சென்னை: 'உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், நடந்தது.இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - காங்., -
 உள்ளாட்சி, தேர்தலை,விரைவாக,நடத்துங்கள்!,தேர்தல் ஆணையத்திடம்,அனைத்து கட்சிகள்,வலியுறுத்தல்

சென்னை: 'உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், நடந்தது.

இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., - காங்., - தே.மு.தி.க., - கம்யூனிஸ்டுகள் உட்பட, 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் பங்கேற்றனர். அவர்களிடம், 'உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆணையம் தயாராகி வருகிறது; உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்:


அ.தி.மு.க.,-துணை சபாநாயகர் ஜெயராமன்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி, பெண்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு அளித்து, உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

தேர்தலை விரைந்து நடத்தி, மூன்றரை ஆண்டுகளாக முடங்கியுள்ள, உள்ளாட்சி நிர்வாகங்கள், மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தில் தடை பெறாத வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும்.

தி.மு.க., - கிரிராஜன்: உயர் நீதிமன்றம், 2016ல் கூறியபடி, யாருக்கு ஓட்டளித்தோம் என அறியும் வகையிலான, வி.வி., பேட் இயந்திரத்தை பயன்படுத்தி,முறையாக தேர்தலை நடத்த வேண்டும். மத்திய அரசு அதிகாரிகளை, தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும். இடஒதுக்கீடு குறித்த விவரங்களை முறையாக அறிவிக்க வேண்டும். எந்த சட்ட சிக்கலுக்கும் இடம் தராமல், உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். மாநிலம் முழுவதும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.ஊரக பகுதிகளில் வேட்பாளர் பெயரை அச்சிட்டு, ஓட்டுச் சீட்டுக்களை தயார் செய்ய வேண்டும்.


காங்., - தாமோதரன்: உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். இடஒதுக்கீடு குறித்து, காங்., பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை.தேர்தலில் பண வினியோகத்தை தடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் அதிகார பலத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும். ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

தே.மு.தி.க., - மோகன்ராஜ்: ஏற்கனவே, 31 மாவட்ட கவுன்சிலர் பதவிகள் உள்ளன. தற்போது, ஐந்து புதிய மாவட்டங்கள் உதயமாகியுள்ளன. மாவட்ட கவுன்சிலர் எண்ணிக்கை அதிகரிக்கப் படுமா என, தெளிவுப்படுத்த வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த, அனைத்து வழிமுறைகளையும் கையாள வேண்டும். தேர்தலை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இறுதியாக, தேர்தல் ஆணைய அதிகாரிகள், 'பழைய மாவட்டங்கள் அடிப்படையில் தான், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். துணை பதவிகள் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.'இதுதொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது. ஏற்கனவே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதால், வி.வி., பேட் கருவியை பயன்படுத்த வாய்பில்லை' என்றனர்.

ஆலோசனை கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணைய செயலர் சுப்பிரமணியம், நகராட்சி நிர்வாக இயக்குனர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


கலெக்டர்களுக்கு உத்தரவு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதே போல அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்த வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களான மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த கூட்டங்களில் அரசியல் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் முன்னேற்பாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

அமைதியான முறையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்கும் படி , அவர்களிடம் வலியுறுத்தவும் கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலதேர்தல்ஆணைய உத்தரவின் படி விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் தேரத்ல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 11 அரசியல் கட்சிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X