'மஹாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயை தேசபக்தர்' என, பா.ஜ., பெண், எம்.பி., பிரக்யா தாக்குர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபாவில் இருந்து காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதற்கிடையே, பிரக்யாவுக்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பார்லி.,யின் ராணுவ ஆலோசனை குழுவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து, லோக்சபாவில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. அப்போது, மஹாத்மா காந்தியைக் கொன்றது ஏன் என கோட்சே கூறியதை மேற்கோள் காட்டி, தி.மு.க.,வின் ராஜா பேசினார். விவாதத்தில் குறுக்கிட்ட, பிரக்யா தாக்குர், 'தேசபக்தரை உதாரணமாக கூறக் கூடாது' என, கூறினார். இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
தேச பக்தர்
இந்நிலையில், இந்த பிரச்னை, நேற்றும் லோக்சபாவில் எதிரொலித்தது. கூட்டம் துவக்கியதும், காங்.,கின் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்தப் பிரச்னையை எழுப்பினார்.அவர் பேசியதாவது:
கோட்சேயை தேசபக்தர் என்றும், காங்.,கை பயங்கரவாத கட்சி என்றும் பிரக்யா கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான காங்., தொண்டர்கள் சுதந்திரத்தின்போதும், அதன்பிறகும் நாட்டு நலனுக்காக தங்களுடய உயிரை தியாகம் செய்துள்ளனர். எவ்வளவு தைரியம் இருந்தால், மஹாத்மா காந்தியை கொன்றவரை தேசபக்தர் என்று பிரக்யா தாக்குர் கூறுவார்; அதும், லோக்சபாவில். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பா.ஜ., கொள்கையின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
மஹாத்மா காந்தி, நேரு போன்றோரின் சிறப்புகளை மழுங்கடிக்க பா.ஜ., முயற்சிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.அதைத் தொடர்ந்து காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தி.மு.க., தேசியவாத காங்., திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டனர்."பிரக்யாவின் பேச்சு சபை குறிப்பில் இடம்பெறவில்லை. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டும்," என, சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.
ஆனால், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு திரிணமுல் காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனுமதி கேட்டன. ஆனால், சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது:
மஹாத்மா காந்தியைக் கொன்றவரை, தேசபக்தர் என்று கூறுவதை பா.ஜ., கடுமையாக கண்டிக்கிறது. காந்தியின் கொள்கைகள் தான், நம் நாட்டை எப்போதும் வழிநடத்தி வருகின்றன. இதில் எந்த சமரசமும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்ந்து கோஷமிட்ட காங்., உறுப்பினர்கள், பின்னர் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., திரிணமுல் காங்., தேசியவாத காங்., கம்யூனிஸ்ட் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.
பிரக்யா விளக்கம்
சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரக்யா தாக்குர் கூறியுள்ளதாவது:சில நேரங்களில் பொய்களின் புயலால், பகல் கூட இரவாகத் தெரியலாம். ஆனால், சூரியன் தனது ஒளியை இழக்காது. தற்போது பார்லி.,யில் நடந்துள்ள பொய்களின் புயலில் மக்கள், தங்களுடைய கவனத்தை சிதற விட வேண்டாம். தேசபக்தர் உத்தம் சிங்கை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன் என்பதுதான் உண்மை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பா.ஜ., கண்டிப்பு
இந்த விவகாரம் தொடர்பாக, பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி. நட்டா கூறியதாவது:சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள பிரக்யா தாக்குருக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அவருடைய பேச்சு, கட்சியின் கொள்கைக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தக் கூட்டத் தொடர் முழுவதும், கட்சியின் பார்லி., குழு கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு தடை விதிக்கப் பட்டு உள்ளது. சமீபத்தில், பிரக்யா, பார்லி.,யின் ராணுவத்துக்கான ஆலோசனை குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்படுகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.
'பிரக்யா தாக்குர் ஒரு பயங்கரவாதி. அவருடைய பேச்சு, இந்திய பார்லி.,யின் வரலாற்றில் மிகவும் மோசமான நாளாகும்' என, காங்., முன்னாள் தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.'மன்னிப்பு கேட்காமல்உள்ளே விடக்கூடாது'மூத்த எம்.பி.,க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தயாநிதி, மாணிக் தாக்கூர், பிரேமச்சந்திரன் உள்ளிட்ட, 50 க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு, சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
அதில், 'காந்தியை, சபைக்குள் அவமதித்த பிரக்யா தாக்கூர் மீது, கண்டன தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. அவரை சபையின் அலுவல்களிலிருந்து, ஒதுக்கி வைக்க வேண்டும்; மீண்டும் அலுவல்களில் அனுமதிப்பதற்கு முன், அவர், சபையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர்-