சென்னை, ;வெங்காயத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில், தினமும் உயர்ந்து வருகிறது. பெரிய வெங்காயம், 140; சின்ன வெங்காயம், 160 ரூபாய் என, விலை உச்சத்தில் உள்ளது. ஜனவரிக்கு பிறகே விலை குறையும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.தமிழகத்தின் பல மாவட்டங்களில், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் சாகுபடி நடக்கிறது.
போதுமான உற்பத்தி இல்லாததால், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து, வெங்காயம் வரவழைக்கப்படுகிறது.தற்போது, இம்மாநிலங் களில் வெங்காய சாகுபடி நடந்து வருகிறது. ஏற்கனவே, இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம், மழையால் வீணாகி விட்டது. இருப்பில் உள்ள குறைந்த அளவு வெங்காயம் மட்டுமே, விற்பனைக்கு வருகிறது. நாடு முழுவதும் இதேநிலை உள்ளதால், வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது, சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், கிலோ பெரிய வெங்காயம், மொத்த விலையில், ரக வாரியாக, 80 முதல், 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவற்றை வாங்கி செல்லும் வியாபாரிகள், சில்லரையில், கிலோ, 100 முதல், 140 ரூபாய் வரை விற்கின்றனர். கிலோ சின்ன வெங்காயம், ௧60 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரித்தால் மட்டுமே, வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கையை, தமிழக அரசு எடுக்கவில்லை. விலை உயர்வால், பெரிய வியாபாரிகளும் வெங்காய இறக்குமதி யில் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே, புதிய வெங்காயம் அறுவடை, அடுத்தாண்டு ஜனவரி இறுதியில் துவங்கும். அப்போது தான், வெங்காயம் விலை குறையும்; அதுவரை விலை குறைய வாய்ப்பில்லை என்கின்றனர், வியாபாரிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE