சென்னை :பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகியை பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை வழங்கும்படி, ஈரோடு மாவட்ட குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஈரோடு மாவட்டம், பவானியில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள பெண் யானை வேதநாயகி, மூன்று ஆண்டுகளாக, நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
அதற்கு உரிய சிகிச்சை யளிக்க, முதுமலை யானைகள் முகாமுக்கு அனுப்ப, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பில், யானை வேதநாயகியை, பாகன் முறையாக பராமரிப்பதில்லை. சரியாக உணவு உட்கொள்ளாததால், யானை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக வாதிடப்பட்டது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வளர்ப்பு யானையை, அதன் உரிமையாளர் முறையாக பராமரிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு வளர்ப்பு விலங்குகள் பராமரிப்பு சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் உள்ளன. மனுதாரர், ஈரோடு மாவட்ட குழுவை அணுக வேண்டும். மாவட்ட குழுவினர், வன உயிரின காப்பாளர் மற்றும் கால்நடை டாக்டர், யானையை பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.