பொது செய்தி

தமிழ்நாடு

15 செ.மீ., கொட்டிய மழையால் சென்னை புறநகரில் வெள்ளம்

Updated : நவ 29, 2019 | Added : நவ 28, 2019
Advertisement
15 செ.மீ., கொட்டிய மழையால் சென்னை புறநகரில் வெள்ளம்

சென்னை,:'வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும், 2ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட கிழக்கு பருவ மழை, தமிழகத்தில் மீண்டும்தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, 12:30 மணி முதல், அதிகாலை வரை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், அடைமழை பெய்தது. அதிகபட்சமாக தாம்பரத்தில், 15 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது.

அதனால், தாம்பரம், சேலையூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், குரோம்பேட்டை பகுதிகளில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பல இடங்களில் கால்வாய்களிலும், ஏரிகளிலும் உடைப்பெடுத்து, 1 அடிக்கு மேல், சாலைகளில் மழை நீர் தேங்கியது. தாம்பரம் சுற்றுப்புற பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியவில்லை. பல இடங்களில் வாகன விபத்துகளும் ஏற்பட்டன. பள்ளி, கல்லுாரிகளுக்கு, நேற்று விடுமுறைஅறிவிக்கப்பட்டது. நேற்று பகலில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. சில இடங்களில் துாறல் மட்டும் விழுந்தது. மாலையில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை முதல், 2ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் சில இடங்களில், கன மழை மற்றும் மிக கன மழை பெய்யலாம்.

சென்னையில் மிதமான மழையும், சில நேரம் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தமிழக பகுதியில், சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர்கூறினார்.இன்றும், நாளையும் எப்படி?நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கன மழைக்கு கூடுதல் வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின், சில இடங்களில், நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில், நாளை மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல, புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேநேரத்தில், வட கிழக்கு பருவ மழை காலத்தில், நேற்று வரை தமிழகத்தில், 35 செ.மீ., மழை சராசரியாக பெய்திருக்க வேண்டும். ஆனால், 32 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது. சென்னையில், 59 செ.மீ.,க்கு பதில், 39 செ.மீ., மட்டுமே பெய்துள்ளது. புதுச்சேரியில், 65 செ.மீ.,க்கு பதில், 48 செ.மீ., மட்டும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X