சென்னை :சிலை கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பொன் மாணிக்கவேல் பணிக்காலம், நாளை நிறைவு பெறுகிறது.மதுரை மாவட்டம், டி.அரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் மாணிக்கவேல், 61. காவல் துறையில், 1989ல், ராமேஸ்வரம், டி.எஸ்.பி.,யாக பணியை துவக்கினார். சேலம் எஸ்.பி., - உளவுத்துறை டி.ஐ.ஜி., - ரயில்வே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.ஐ.ஜி., மற்றும், அதே பிரிவுகளில், ஐ.ஜி.,யாக பணியாற்றி, 2018 நவ., 30ல், ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற நிலையில் ஓய்வு பெற்றார்.
அன்றே, சென்னை உயர் நீதிமன்றம், இவரை ஓர் ஆண்டுக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது. அதன்படி, பொன் மாணிக்கவேலின் பணிக்காலம், நாளை நிறைவு பெறுகிறது. இதற்கிடையில், பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில், அவரது சார்பில், வழக்கறிஞர் மணி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை, டிச., 6க்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.விடைபெறுகிறாரா?ஏழு ஆண்டுகளில், பொன் மாணிக்கவேல், 1,146 சிலைகளை மீட்டுள்ளார். வெளிநாடு களுக்கு கடத்தப்பட்ட, ஒன்பது சிலைகளை மீட்டு, தமிழகத்திற்கு எடுத்து வந்துள்ளார். சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூர் உள்ளிட்டோரை கைது செய்துள்ளார். அதேபோல, சிலை மோசடி செய்தது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும் கைது செய்தார்.
இவருக்கு பணி நீடிப்பு அளிக்க வேண்டும் என, பொன் மாணிக்கவேல் ஆதரவு போலீசார் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து, போலீசார் கூறியதாவது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக, பொன் மாணிக்கவேலை நியமித்தபோது, 'மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, அவர் பணியாற்றலாம்' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.இதனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே, பொன் மாணிக்கவேல் பணியில் நீடிக்கிறாரா அல்லது விடைபெறுகிறாரா என்பது தெரியவரும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE