தேனி :போலி 'மினரல் வாட்டர்' தயாரித்து தேனி பஸ் ஸ்டாண்டில் விற்றவருக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.தேனி புது பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். ஆய்வில், 45ம் எண்ணில் உள்ள 'அனுஸ்ரீ கூல்டிரிங்க்ஸ்' கடையில் மினரல் வாட்டர் பாட்டில் 'சீல்' இல்லாமல் விற்கப்படுவது தெரியவந்தது. கடைக்குள் சென்று பார்த்தபோது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் சாக்கு பைகளில் இருந்தன.நகராட்சி குழாய் தண்ணீரை பாட்டிலில் அடைத்து பல்வேறு கம்பெனி லேபிள்களுடன் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.20க்கும், குளிர்ந்த குடிநீர் ரூ.30க்கும் விற்பனை செய்துள்ளனர்.இதற்கான காலி பாட்டில்கள் மதுக்கடைகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. பஸ்சில் செல்லும் அவசரத்தில் பயணிகள் பணம் கொடுத்து சுகாதாரமற்ற குடிநீரை பருகியுள்ளனர். கடையில் இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பாட்டில்களை பறிமுதல் செய்து நகராட்சி கிடங்கில் அழித்தனர். கடை உரிமையாளர் அலெக்ஸ்க்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமின்றி உணவு பொருட்கள் விற்போர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.