தேனி, 'நீட்' ஆள்மாறாட்ட வழக்கில் மாணவரின் தந்தை சரவணனுக்கு தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்ந்த வழக்கில் ஒரு மாணவி உள்பட 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர் பத்து பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. பெற்றோர் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்நிலையில் உடல்நிலை காரணமாக மாணவரின் தந்தை டாக்டர் வெங்கடேசனுக்கு நவ., 26ல் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து தேனி சிறையில் இருந்த மாணவர் பிரவினின் தந்தை சரவணன், தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.'போலீசார் விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும்,' என அறிவுறுத்தி சரவணனுக்கு மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் ஜாமின் வழங்கினார். இவ்வழக்கில் முக்கிய புள்ளியாக கருதப்படும் புரோக்கர்கள், தேர்வு எழுதிய போலி மாணவர் என யாரையும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இதுவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.