பெற்றோரை பெருமைப்படுத்துவோம்

Added : நவ 28, 2019
Advertisement
 பெற்றோரை பெருமைப்படுத்துவோம்

இந்த உலகிலேயே நமக்கு கெடுதல் நினைக்காமல் எப்பொழுதுமே நாம் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் பெற்றோர். கடவுள் எல்லா இடங்களிலும் தானே இருக்க முடியாது என்பதற்காகத்தான் பெற்றோர்களை படைத்தான். ஒரு தாய் ஈரைந்து மாதங்கள் தனது பிள்ளையை இன்னல்களைத் தாங்கிக்கொண்டு இன்பமாக சுமக்கிறாள்.உணவிலிருந்து உறக்கம் வரை குழந்தைக்காகவே தனது விருப்பங்களை கூட புறக்கணித்துவிட்டு வாழ்கிறாள். ஒரு பெண் தனது குழந்தையை ஈன்றெடுக்கும் பொழுது தாங்குகின்ற வேதனையானது சராசரியாக ஒரு மனிதன் தாங்குகின்ற வலியை விட அதிகமாகும்.


நல்ல தந்தைஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமானவர். நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் உழைப்பும் தியாகமும் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டும் என்கின்ற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள். ஆனால் தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்று விட வேண்டும் என்ற துடிப்போடு தன் தோள்களில் துாக்கி சுமக்கிறார்.திருவிழாவில் சுவாமியைப் பார்க்க தன் அப்பாவின் தோள்கள் மீது ஏறி இருக்கும் குழந்தைகளுக்கு தெரியாது தான் உண்மையிலேயே சுவாமியின் தோள்கள் மீது தான் ஏறி இருக்கிறோமென்று. ஒரு தந்தை தனது குழந்தைக்கு நல்லதொரு வாழ்வு அமையும் வரை படுகின்ற அவமானங்களும் வேதனைகளும் சொல்லிமாளாது. ஆனால் அத்தனையையும் பொறுத்துக்கொண்டு தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன்மானத்தை கூட துாக்கியெறிபவர்தான் தந்தை.


பெற்றோருக்கு அவமானம்


ஏறத்தாழ 20 வருடங்களுக்கு மேல் தான் படுகின்ற கஷ்டங்களை ஒரு துளி கூட வெளிப்படுத்தாமல் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வலிகளை சுமந்து கொண்டிருக்கின்ற பெற்றோர்களை 20 நாட்களில் பழகிய ஒரு ஆணுக்காகவோ அல்லது பெண்ணுக்காகவோ துாக்கி எறிகிறோம் காதல் என்ற பெயரால். அந்த இடத்தில் நமது பெற்றோர்களின் ஆசை, எதிர்பார்ப்பு மரியாதை இவற்றையெல்லாம் விட நமது ஆசை மேலோங்குகிறது. எந்த விளைவுகளை பற்றியும் சிந்திக்காமல் நாம் எடுக்கின்ற முடிவானது நம் வாழ்க்கையையும் நரகமாக்கி நம் பெற்றோருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறது.தெருவெல்லாம் சிரித்த முகத்தோடு கம்பீரமாக நடந்து வந்த நம் தந்தை சிரிப்பை தொலைத்துவிட்டு கறுத்த முகத்தோடும் கனத்த இதயத்தோடும் நடைப்பிணமாக வாழ்க்கையை தொடர்வது என்பது வேதனையான விஷயம்.


பெற்றோரின் பாசம்பிறந்தது முதல் இப்பொழுது வரை நமது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி கொண்டும் நமக்கு நல்லதை மட்டும் எண்ணுகின்ற பெற்றோர்களா நமக்குத் தீங்கு நினைப்பார்கள்? நமக்கு காதலர் தினம் நினைவிருக்கிறது; அன்னையர் தினம் மறந்து விடுகிறது. சமீபத்தில் ஒரு புதிய திரைப்படம் வெளியானபோது ரசிகக் கண்மணி ஒருவர் தன் அம்மாவின் அறுவை சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தை கொண்டு வந்து டிக்கெட் வாங்க வந்தேன்; ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டார். இவர்களை எல்லாம் எவ்வாறு திருத்த முடியும். செய்கின்ற செயல்களால் பெற்றோருக்கு எந்த சூழ்நிலையிலும் அவர்கள் பணிபுரிகின்ற இடத்திலும் வாழ்கின்ற சமுதாயத்திலும் தலைகுனிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமை.


மனம் விட்டு பேச வேண்டும்பெற்றோர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். சரியான செயல்களையே செய்ய வேண்டும்.பெற்றோர்களை காயப்படுத்துவது என்பது பாவச்செயல். இது ஒருபுறமிருக்க இன்னும் சில நபர்கள் திருமணம் முடிந்த பின்பு தனது பெற்றோர்களை பேணிக் காக்காமல் அவர்களை தனியாக தவிக்க விட்டு செல்கின்றனர். நம்மைப் பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர்களை திருமணத்திற்குப் பின்பு ஏறெடுத்து பார்ப்பதற்கும் யோசிக்கின்ற பிள்ளைகளும் உண்டு.அவர்களிடம் மனம் விட்டு பேசுவதும் இல்லை; அவர்களுக்காக நேரம் செலவழிப்பதில்லை. அவர்களது தேவைகளை கூட பூர்த்தி செய்வதில்லை. இன்னும் சிலர் பெற்றோர் செலவுக்கு பணம் மட்டும் கொடுத்து விட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். பணத்தால் நாயை மட்டும் தான் விலைக்கு வாங்க முடியும் பாசத்தால் தான் அதன் வாலை ஆட்ட வைக்க முடியும்.


ஊதியமில்லா ஊழியர்கள்வயதான காலத்தில் எத்தனையோ பெற்றோர் பிள்ளைகளின் வீட்டில் ஊதியமில்லா ஊழியர்களாக பணிபுரிகிறார்கள். இன்னும் சில பிள்ளைகள் தனது பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு சாதனை செய்தது போல் உணர்கிறார்கள். எல்லாரது இதயத்திலும் தாங்க முடியாத ரணத்தை இந்த தந்தையின் கவிதை ஏற்படுத்தும் என்பதில் ஐயமே இல்லை.குழந்தை பருவத்தில் உன்னை மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்காக முதன் முதலாக நகையை விற்றேன்... முதலிடத்தில் உள்ள பள்ளியில் உன்னை முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு நன்கொடை கட்டமுடியாமல் பரம்பரைச் சொத்தான நிலத்தை விற்றேன்...அடுத்தடுத்த வகுப்புகளுக்கு ஆடுகளை விற்றேன்... மேல்நிலை படிப்புகளுக்கு மாடுகளை விற்றேன்... உன்னுடைய சுற்றுலா செலவுகளுக்கு என்னை சுற்றி இருந்த பொருட்களை எல்லாம் விற்றேன்...உன் பயணச் செலவுக்காக பல சமயம் என் பசியை விற்றேன்... தேர்வு நாட்களில் உனக்கு தேனீர் கொடுக்கவே என் துாக்கத்தை விற்றேன்... கடைசியில் உன் கல்லுாரி படிப்புக்காக நான் ஆசைப்பட்டு கட்டிய வீட்டையும் விற்றேன்... படித்தாய்... வளர்ந்தாய்... உயர்ந்தாய்... வாங்கினாய் மீண்டும் எல்லாவற்றையுமே... இன்று நீ இருப்பதோ மூன்றடுக்கு இல்லத்தில்...ஆனால் நான் இருப்பதோ முதியோர் இல்லத்தில்... எல்லாம் விற்றும் என்னிடம் இருந்தது இதயம்...! எல்லாமே பெற்றும் உன்னிடம் இல்லாமல் போனது இதயம்...!''


அன்பு செலுத்துங்கள்பெற்றோர்கள் ரோஜா செடிகளை போல தனக்காக முட்களையும் பிள்ளைகளுக்காக மலர்களையும் விட்டுச் செல்வார்கள். பெற்றோர்களிடம் அன்பு செலுத்துங்கள்; அக்கறை காட்டுங்கள். நேசியுங்கள் அவர்களுடனே நேரத்தை செலவழியுங்கள் அவர்கள் பேச்சுக்கு அங்கீகாரம் அளியுங்கள்; வாழும் போதே சொர்க்கம் என்ற வாய்ப்பு நமக்குக் கிடைத்துவிடும்.-எஸ்.ராஜசேகரன், தலைமை ஆசிரியர்ஹிந்து மேல்நிலைப்பள்ளிவத்திராயிருப்பு. 94429 84083

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X