சென்னை :''அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது'' என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறினார்.தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஊசிகள் உடைந்து நோயாளிகளின் உடலில் ஒரு பகுதியில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதனால் ஊசிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது:தமிழகத்தில் உயர் தரமான மருந்துகள் ஊசிகள் உள்ளிட்டவை மாநில மருத்துவ பணிகள் கழகத்தின் வாயிலாக கொள்முதல் செய்யப்படுகின்றன. சமீபத்தில் ஓரிரு அரசு மருத்துவமனைகளில் துரதிருஷ்டவசமாக சில சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஊசிகளின் தரம் குறித்து விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனர் உமாநாத் கூறியதாவது:மாநில அரசு கொள்முதல் செய்யும் ஊசிகள் அனைத்தும் உயர் தரமானவை. நோயாளிகளுக்கு ஊசி செலுத்தும்போது அதன் முனை உடைந்ததாக கூறப்படும் சம்பவங்களில் மாநில அரசு கொள்முதல் செய்த ஊசி பயன்படுத்தப் படவில்லை.மேட்டுப்பாளையம் சம்பவத்தில் மத்திய அரசின் நலத்திட்டத்தில் வழங்கப்பட்ட ஊசியை தான் நர்ஸ் பயன்படுத்தியுள்ளார். அதன் தரம் குறித்து உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு உள்ளதால் ஊசிகளை ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.