புது டில்லி 'தொகுதி மற்றும் மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது' என உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து பல கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.இந்தப் பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது. ஏற்கெனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் தேர்தல் நடத்த அனுமதிக்க கூடாது.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.