பொது செய்தி

தமிழ்நாடு

புறநகரில் வளர்ச்சி அதிகரிக்கும்!

Added : நவ 28, 2019
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளதால், புறநகர் பகுதிகளில், வீட்டுவசதி மற்றும் தொழில் வளர்ச்சி விரைவாக நடக்கும் என, தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிர்வாக முடிவுகளுக்காக காத்திருக்கும் நேரம் குறையும் என, பொது மக்களும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
வேலை வாய்ப்பு
காஞ்சிபுரம் தனி மாவட்டமாக இருந்தாலும், அதன் கிழக்கு பகுதியின் பெரும்பாலான தாலுகாக்கள், சென்னையின் புறநகர் பகுதிகளாகவே உள்ளன. இங்கு, விவசாயம் மட்டுமே பிரதானமாக இருந்த நிலையில், நகர மயமாக்கலுக்கு பின், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.இந்த வகையில் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில், நகர்ப்புற வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், சுற்றுலா பகுதிகள் அதிகமாக உள்ளதால், இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது.இதனால், இந்த தாலுகாக்களில் அதிக மக்கள் குடியேறுகின்றனர். கல்வி, வேலை வாய்ப்பு காரணங்களுக்காக, சென்னை நோக்கி வருவோரில் பெரும்பாலானோர், காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே குடியேறுகின்றனர். இதனால், வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், இங்கு மக்களின் தேவை இயல்பாகவே அதிகமாக உள்ளது.இந்நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதை ஒட்டிய புறநகர் பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதற்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், தாம்பரத்தை தலைமையிடமாக வைத்து புதிய மாவட்டம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப் பட்டுள்ளது. இதனால், வழக்கமாக, 10 நாட்கள் வரை ஆகும் நிர்வாக பணிகள், இனி ஓரிரு நாட்களிலேயே முடிக்கும் நிலை ஏற்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
உத்தரவு
இது குறித்து, புறநகர் பகுதியை சேர்ந்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பரப்பளவு அடிப்படையிலும், மக்கள் தொகை அடிப்படையிலும், பெரிய மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்ததால், நிர்வாக ரீதியான பணி சுமை அதிகமாக இருந்தது. இதனால், அவசரம், மிக அவசரமாக பணிகள் பிரிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.இதில், புறநகர் பகுதியில், பொது மக்களின் நில பிரச்னைகள், தொழில் ரீதியான பிரச்னைகள், உள்ளாட்சிகளின் பிரச்னைகள் தொடர்பான கோப்புகள் அவசரம் என்ற பிரிவுக்கு செல்லவே, 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்தி வரதர் வைபவத்தின் போது, கலெக்டர் அங்கேயே கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளில், ஏரிகளை சீரமைக்க அனுமதி பெற, மாவட்ட கலெக்டர் நேரம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இங்கேயே தனி மாவட்டம் வந்துவிட்டால், இது போன்ற காத்திருப்புகள் குறையும்.மாவட்டத்தின் பரப்பளவு குறைவதால், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிக அளவிலான பகுதிகளை, நேரில் ஆய்வு செய்து தெளிவான உத்தரவுகளை விரைந்து பிறப்பிக்க முடியும். நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பதுடன், உள்ளாட்சி அமைப்புகளையும், அதன் தன்மைக்கு ஏற்ப மறுவரையறை செய்ய வேண்டும்.இவ்வகையில், புறநகர் பகுதிகளில் ஒரே சீரான உள்ளாட்சி நிர்வாகத்துக்காக, புதிய மாநகராட்சியை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான், அரசு துறைகளுக்கான வருவாய் கிடைப்பதும் அதிகரிக்கும், மக்களின் அடிப்படை தேவைகளும் பூர்த்தியாகும்.இவ்வாறு. அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X