தமிழ்நாடு

ஆன் லைனில் முந்திரி ஏலம் பயிற்சி கூட்டத்தில்... பரபரப்பு! விருத்தாசலத்தில் குத்தகைதாரர்கள் வாக்குவாதம்

Added : நவ 29, 2019
Advertisement
ஆன் லைனில் முந்திரி ஏலம் பயிற்சி கூட்டத்தில்... பரபரப்பு! விருத்தாசலத்தில் குத்தகைதாரர்கள் வாக்குவாதம்

விருத்தாசலம் : வனத்தோட்டக் கழகம் மூலம், முந்திரி ஏலம் விடும் பணியை ஆன் லைனில் தொடங்குவது தொடர்பான பயிற்சி கூட்டத்தை, குத்தகைதாரர்கள் புறக்கணித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம், பெரியார் நகரில், தமிழ்நாடு வனத்தோட்டக் கழக மண்டல மேலாளர் அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களில், முந்திரி மகசூலை அணுபவித்து கொள்ள ஏலம் விடும் பணி ஆண்டு தோறும் டெண்டர் மூலம் நடைபெறும்.

இந்நிலையில், வரும் 2020ம் ஆண்டில் இருந்து, மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி., (மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேஷன் லிட்.,) மூலம் ஆன்லைனில் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு, குத்தகைதாரர்கள் மற்றும் முந்திரி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும், ஆன்லைனில் எம்.எஸ்.டி.சி., வெப்சைட்டில் பதிவு செய்வது, ஏலத்தில் பங்கேற்பது குறித்து, விருத்தாசலம் மக்கள் மன்றத்தில் நேற்று பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் மண்டல மேலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். விழுப்புரம் மண்டல மேலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

வனச்சரகர் செந்தில்குமார், வனவர்கள் சுந்தரேசன், செல்வமணி, மதனராஜ் உட்பட வனத்தோட்டக்கழக அலுவலர்கள் மற்றும் விருத்தாசலம், ஆண்டிமடம், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் மற்றும் விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட குத்தகைதாரர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.எம்.எஸ்.டி.சி., நிறுவன சீனியர் மேலாளர் சண்முகம், எல்.சி.டி., திரையில் பயிற்சியளித்தார். அதில், ஆன்லைனில் ஏலம் நடப்பதால், வெளிப்படைத்தன்மை, குத்தகைதாரர்கள், முந்திரி விவசாயிகள் மட்டுமல்லாது வனத்தோட்டக் கழகத்திற்கும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பது உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை விளக்கினார்.

அப்போது, அங்கு திரண்டிருந்த உள்ளூர் விவசாயிகள், குத்தகைதாரர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.'உள்ளே சென்று, வெளியே வர முடியாத நிலையில் இருந்த முந்திரி தோப்புகளை திருத்தி, சாகுபடி செய்து பராமரித்த உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். முந்திரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகள், உள்ளூர் குத்தகைதாரர்கள், விவசாயிகள் நலன் கருதி, ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும். பழையபடி, ஏலம் நடத்த வேண்டும்.இது தொடர்பாக, வனத்தோட்டக் கழக நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, பயிற்சி கூட்டம் என்ற பெயரில் முந்திரி விவசாயிகள், குத்தகைதாரர்களை அலைக்கழிக்கக் கூடாது' என கூறினர்.

இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சமாதானம் செய்தனர். அதைத் தொடர்ந்து, குத்தகைதாரர்கள் அனைவரும் பயிற்சியை புறக்கணித்து வெளியேறினர்.இது குறித்து முந்திரி குத்தகைதாரர்கள் கூறுகையில், 'மத்திய அரசு மூலம் அனைத்து பொருட்களும் ஆன்லைனில் விற்பனை, ஏலம் போன்ற நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் உள்ளூர் விவசாயிகள், குத்தகைதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பராமரிக்கும் பணியை மட்டும் வனத்தோட்டக் கழகமே செய்கிறது. இந்த தொகையில் முழுவதும் முறைகேடு நடக்கிறது.ஆனால், முந்திரி பறிப்பு பணியை மட்டும் ஏலத்தில் விடுவது சரியல்ல. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X