தமிழ்நாடு

ரிஷிவந்தியத்தில் அரசு கல்லூரி அமைக்க... கோரிக்கை! முதல்வர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி

Added : நவ 29, 2019
Advertisement

தியாகதுருகம் : முதல்வர் அறிவித்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியம் பகுதியில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபைத் தொகுதிகளில் ரிஷிவந்தியமும் ஒன்று. கடந்த 1962ம் ஆண்டு தொகுதி அந்தஸ்தைப் பெற்றது. இதுவரை 13 சட்டசபை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. அதேபோல் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியமாகவும் உள்ளது.தொகுதி மற்றும் ஒன்றியத்தின் பெயரை மட்டும் தாங்கி நிற்கும் ரிஷிவந்தியம் இதுவரை எவ்வித வளர்ச்சியும் அடையாமல் கிராமமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரிஷிவந்தியத்தில் இருந்து 23 கி.மீ., தொலைவில் உள்ள பகண்டை கூட்ரோட்டில் அமைந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் பி.டி.ஓ., அலுவலகத்தை ரிஷிவந்தியத்தில் அமைக்க அதிகாரிகள் முயற்சி எடுத்தபோது அப்போதிருந்த சில அரசியல்வாதிகள் இதனை பகண்டை கூட்ரோடுக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு ரிஷிவந்தியத்தின் வளர்ச்சி பின்தங்கியது.கடந்த 2011ம் ஆண்டு வரை ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., அலுவலகம் திருக்கோவிலூரில் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் திருக்கோவிலுார் தனி தொகுதியாக பிரிந்தது.அப்போது எம்.எல்.ஏ., அலுவலகத்தை ரிஷிவந்தியத்தில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதை ஏற்காமல் பகண்டை கூட்டு ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது.

இது அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை இத்தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இவ்வூரின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை என்ற ஆதங்கம் இப்பகுதி மக்களுக்கு உள்ளது.கடந்த 2011ம் ஆண்டு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் ரிஷிவந்தியம் பிரபலமடைந்தது. தொடர்ந்து சட்டசபையில் அவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வானார்.

அதன் பிறகாவது இத்தொகுதி அனைத்து வகையிலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 53 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதனை இரண்டாகப் பிரித்து ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.அதேபோன்று, இத்தொகுதியில் மணலுார்பேட்டை பேரூராட்சி மட்டுமே உள்ள நிலையில் ரிஷிவந்தியத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், பிரிக்கப்பட்டு அதன் துவக்க விழாவில் முதல்வர் பழனிசாமி பேசும்போது ரிஷிவந்தியத்தில் இருபால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் என அறிவித்தார்.இதைக்கேட்டு ரிஷிவந்தியம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் வழக்கம்போல் இதுவும் வேறு இடத்திற்கு சென்று விடுமோ என்ற கவலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கல்லுாரியை ரிஷிவந்தியம் பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இதுவரை அனைத்து வகையிலும் புறக்கணிக்கப்பட்டு தொகுதி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் பெயரை மட்டும் தாங்கி நிற்கும் ரிஷிவந்தியத்தில் முதல்வர் அறிவித்த அரசு கலைக் கல்லுாரியையாவது அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X