திருக்கோவிலுார் : விழுப்புரம் மாவட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டதால், முகையூர் ஒன்றியம் பிரிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு கானல் நீரானது.
விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம் 64 ஊராட்சிகளை உள்ளடக்கியது. மாவட்டத்தில் மிகப்பெரிய ஒன்றியம். எனவே, இரண்டு ஒன்றியங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வந்தது.இதன் காரணமாக கடந்த 2007ம் ஆண்டு முகையூர், மணம்பூண்டி என இரண்டு ஒன்றியங்களாக பிரிக்க அரசு நடவடிக்கையை துவங்கியது. 2013ம் ஆண்டு மணம்பூண்டி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளும், முகையூர் ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளும் பிரிக்கப்பட்டு ஒன்றியக்குழு கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.இதுகுறித்து அப்போதைய முதல்வர் ஜெ., சட்டசபையில் 110 விதியின் கீழ் முகையூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து முகையூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு ஒன்றியமும், மணம்பூண்டியை தலைமையிடமாகக் கொண்டு மற்றொரு ஒன்றியமும் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக கலெக்டர் தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு எல்லை வரையறை செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து, முகையூர் ஒன்றிய அலுவலகத்திற்கான இடம் தேர்வு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஒன்றியத்தை பிரிப்பதற்கான முறையான அரசாணை ஏதும் வெளியிடப்படாமல் எப்போது பிரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் காத்திருந்தனர்.இந்நிலையில், தற்போது மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முகையூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வருகிறது. எனினும் முகையூர் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிறது. இவை திருக்கோவிலுார் ஒன்றியத்துடன் சேர்ப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.அதேபோல் பையூர், மாரங்கியூர், கொங்கராயனுார் உள்ளிட்ட ஊராட்சிகள் திருவெண்ணைநல்லுார் ஒன்றியத்திற்குச் செல்கிறது. இதனால் முகையூர் ஒன்றியம் 45 ஊராட்சிகளுடன் சுருங்கியுள்ளது. இதன் காரணமாக இனி ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பதற்கான சூழல் மிகமிகக் குறைவு என்ற கருத்தை ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அரசின் சார்பில் ஒன்றியத்தை இரண்டாக பிரிப்பதற்கான 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், இதனை நம்பி அரசியல் கட்சிகளும் இரண்டு ஒன்றியங்களுக்கு தனித்தனியாக நிர்வாகிகளை நியமித்து, ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட ஒன்றிய பதவிக்காக காத்திருந்த நிலையில், ஒன்றியம் பிரிப்பு அறிவிப்பு கானல் நீராகியிருப்பது அரசியல் கட்சிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.