சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மோசடி வழக்கில் சிக்கிய பெண் அதிகாரிக்கு மீண்டும் பணி?

Updated : நவ 29, 2019 | Added : நவ 29, 2019
Advertisement
 மோசடி வழக்கில் சிக்கிய பெண் அதிகாரிக்கு மீண்டும் பணி?

''எல்லாத்தையும் நல்ல நாள், நேரம் பார்த்து தான் செய்யிதாரு வே...'' என, டீக்கு ஆர்டர் சொல்லியபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''முதல்வர் இ.பி.எஸ்., தான்... வரிசையா புதிய மாவட்டங்களை துவங்கி வச்சிட்டு இருக்காரே... முதன் முதலா, கள்ளக்குறிச்சியை தான், புதிய மாவட்டமா அறிவிச்சாரு வே...''ஆனா, தென்காசியை தான் முதல்ல துவக்கி வச்சாரு... கோவில் ஊர்ல, முதல்ல விழாவை துவங்கலாம்னு தான், காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிற தென்காசியை, புதிய மாவட்டங்கள் வரிசையில முதல்ல துவக்கியிருக்காரு... ''அதே மாதிரி, நிறைஞ்ச அமாவாசையில, கள்ளக்குறிச்சியை துவக்கி வச்சவர், அங்கயே, பொங்கல் பரிசு அறிவிப்பையும் வெளியிட்டாரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''மண்ணெண்ணெய் பாட்டிலோட போய் மிரட்டினா, எந்த காரியத்தையும் சாதிச்சிடலாம் போலிருக்கு பா...'' என, அடுத்த தகவலுக்கு வந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...''நாகை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனரான பெண் அதிகாரி, ரொம்பவே துணிச்சலானவங்க... சமீபத்துல, மணல் கடத்துன ஒரு டிப்பர் லாரியை பிடிச்சு, மணல்மேடு போலீசாரிடம் ஒப்படைச்சாங்க பா...''ஆனா, வழக்கும் போடாம, லாரியையும் விடுவிக்காம, ஒரு வாரமா போலீசார் இழுத்தடிச்சிருக்காங்க... இதனால, கோபமான லாரி உரிமையாளர், குடும்பத்தோட கலெக்டர் அலுவலக வளாகத்துல, தீக்குளிக்க போயிட்டாரு பா...''அவரை போலீசார் தடுத்து நிறுத்திட்டாங்க... இது, கலெக்டர் பிரவீன் நாயர் கவனத்துக்கு போயிருக்கு... 'தீக்குளிப்பு எதுவும் நடந்தா, மாவட்ட நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் வந்துடும்... அதனால, லாரியை விட்டுடுங்க'ன்னு போலீசாருக்கு சொல்லிட்டாராம் பா...''இதனால, கனிமவளத் துறை அலுவலர்கள் அதிர்ச்சியாகிட்டாங்க... 'இனிமே மணல் திருடுறவங்க மேல நடவடிக்கையே எடுக்க முடியாது போலிருக்கு'ன்னு புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மோசடி வழக்குல சிக்குன பெண் அதிகாரிக்கு பலத்த சிபாரிசுகள் வருதுங்க...'' என, கடைசி மேட்டருக்கு நகர்ந்தார், அந்தோணிசாமி.''விளக்கமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''சென்னை, பள்ளிக்கரணையில, இறந்தவர் பெயர்ல இருந்த, 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சிலர் மோசடியா அபகரிச்சாங்க... இந்த மோசடிக்கு துணை போனதா, பதிவுத்துறை பெண் அதிகாரியை, 2018ல கைது செஞ்சாங்க...''அப்புறமா அவரை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க... சில மாசத்துல ஜாமின்ல வந்தவங்க, மறுபடியும் பணியில சேர, பகீரத பிரயத்தனம் பண்ணிட்டு இருக்காங்க... துறையில எந்த அதிகாரியும் உதவாத சூழல்ல, ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., ஒருத்தர் மூலமா, பிடிக்க வேண்டியவங்களை பிடிச்சுட்டாங்க...''இதனால, இவங்களோட பைல் வேகமா நகர்ந்துட்டு இருக்காம்... இதைப் பார்த்து, பதிவுத்துறை தலைமை அலுவலக அதிகாரிகளே வாயடைச்சுப் போயிருக்காங்க...'' என, முடித்து, அந்தோணிசாமி கிளம்பவும், மற்றவர்களும் எழுந்தனர்.தெருவில் சென்ற சிறுமியை பார்த்த குப்பண்ணா, ''என்ன, சிவபிரியா... ஸ்கூலுக்கு இவ்ளோ சீக்கிரமா கிளம்பிட்டியா...'' எனக் கேட்க, ''ஸ்பெஷல் கிளாஸ் தாத்தா...'' என்றபடியே, சிறுமி நடந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X