சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே, கட்சி துவக்கிய போது, ‛நானோ, என் குடும்பத்தாரோ ஆட்சியில் எந்த பதவிக்கும் வரமாட்டோம்' என, திட்டவட்டமாக அறிவித்தார்.
ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, அவரது மகன் உத்தவ் தாக்கரே, 59, நேற்று முதல்வராக பொறுப்பேற்றார். உத்தவ், மும்பையில், 1960, ஜூலை 27ல் பிறந்தார். இவரது தந்தை அரசியலில் இருந்தாலும், இவர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். பட்டப்படிப்பு முடித்துள்ள உத்தவ், புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். பல புகைப்பட கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.
கடந்த, 2002ல் தான், அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கினார். இவரது தலைமையில், சிவசேனா, 2002ல், மும்பை மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வென்று மேயர் பதவியை கைப்பற்றியது. இதற்குப்பின், 2003ல், சிவசேனா செயல் தலைவரானார். 2006 ஜூன் முதல், நேற்று வரை, கட்சி பத்திரிகை, 'சாம்னா'வின் ஆசிரியராக பணியாற்றினார்.
பால் தாக்கரே மறைவுக்குப்பின், உத்தவ், 2013 ஜன., 23ல் கட்சி தலைவரானார். இவருக்கு ஆதித்ய தாக்கரே, தேஜஸ் தாக்கரே என இரண்டு மகன்கள். ஆதித்யா, எம்.எல்.ஏ., வாக இருக்கிறார்.
மஹாராஷ்டிராவில், சிவசேனா சார்பில், மனோகர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோருக்குப்பின், மூன்றாவது முதல்வராக, நேற்று பதவியேற்றார்.