கோவை:கோவை, கொங்குநாடு மருத்துவமனைக்கு, மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் (எல்.பி.ஏ.,) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோவை, காந்திபுரம், டாடாபாத், 11வது வீதியில், தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களுடன் கொங்குநாடு மருத்துவமனை செயல்படுகிறது. வரைபட அனுமதிக்கு மாறாக கூடுதல் கட்டடம் கட்டியிருப்பதோடு, வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கவில்லை. எதிர்புறத்தில் அனுமதி பெறாமலேயே கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த விதிமீறல் தொடர்பாக, டாடாபாத், 11வது வீதி குடியிருப்போர் நடவடிக்கை குழு கன்வீனர் ராமசுப்ரமணியன், கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, போலீஸ் கமிஷனர் அலுவலகம், உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலருக்கு புகார் அனுப்பினார். உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டியிருப்பதை உறுதி செய்து, நோட்டீஸ் அனுப்பினர். அதில், சுட்டிக்காட்டியிருந்த தவறுகளை திருத்தியமைக்காததால், உள்ளூர் திட்டக்குழுமம் இரண்டாம் முறையாக மீண்டும் எச்சரிக்கை நோட்டீஸ் அளித்துள்ளது.அதில், 'மருத்துவமனை, உணவகம் அனுமதியின்றி செயல்படுகிறது. மருத்துவமனை பிரதான கட்டடம், தரைத்தளம் மற்றும் தரைதாழ்தளம் ஆகியவற்றில், முன்பக்கத்திறவிடம், பின்பக்கத்திறவிடம், பக்கத்திறவிடம் விதிகளுக்கு உட்பட்டு விடப்படவில்லை. விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை, 30 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையெனில், கட்டட வளாகத்தை பூட்டுதல், சீல் வைத்தல், கட்டுமானத்தில் இருக்கும் பொருட்களை கைப்பற்றுதல் உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். 'அப்பொருட்கள் ஏலத்தில் விற்கப்படும். உரிமையாளர் மீது வழக்கும் தொடரப்படும். கட்டடத்துக்கு 'சீல்' வைக்கும்போது, அவ்வளாகத்துக்கு சட்டப்படி பாதுகாப்பு தர வேண்டியது, உரிமையாளரின் பொறுப்பு' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சூழலில், கட்டட வரைபட அனுமதி நகல் சமர்ப்பிக்காத காரணத்தால், அங்கீகரிக்கப்படாத கட்டடமாக கருதி, மாநகராட்சி சட்ட விதி - 296 (1) (2) என்கிற பிரிவின் கீழ், (அனுமதியற்ற கட்டடங்களை தாமாக அகற்றிக் கொள்ளுதல்/ திருத்திக் கொள்ளுதல்), மாநகராட்சி நகரமைப்பு பிரிவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உள்ளூர் திட்டக்குழுமம் வழங்கிய அவகாசம், வரும், 30ல் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, '30 நாட்கள் அவகாசம் கொடுத்து, நோட்டீஸ் வினியோகித்துள்ளோம். உள்ளூர் திட்டக்குழுமம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஏற்ப, அனுமதியற்ற கட்டடம் இடித்து அகற்றப்படும்' என்றனர்.கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ராஜூவிடம் கேட்டபோது, ''அங்கீகாரமற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்த, சட்டப்படி, அரசுக்கு உரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்து, அனுமதிக்காக காத்திருக்கிறோம்.''மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமம் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அனுப்பி விட்டோம். ஒரே நேரத்தில், 30 கார்கள், 100 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி செய்திருக்கிறோம்,'' என்றார்.