'
''சினிமா மிகப்பெரிய ஆயுதம். அது பிரம்மாஸ்திரம் போன்றது. சரியாக கையாண்டால், பல சாதனைகளை படைக்கலாம்,'' என்கிறார், அடுத்தசாட்டை படம் வாயிலாக, தயாரிப்பாளரான டாக்டர் பிரபுதிலக்.
அவருடன் பேசியதிலிருந்து...அடுத்த சாட்டை படம் பற்றி?கல்லுாரி பேராசிரியருக்கும், மாணவருக்கும் உள்ள உறவை பற்றிய கதை. இன்றைய கல்வியில், என்ன மாதிரியான மாற்றங்கள் இருந்தால், மாணவர்களுக்கு நல்லது என்பதை, இப்படத்தில் கூறியுள்ளோம்.குறை மட்டுமே சொல்லாமல், மாணவ சமுதாயத்தை கையை பிடிச்சி, நாங்களே அழைத்துச் செல்வது போல், இப்படம் இருக்கும். படித்து முடித்த வாத்தியாரை விட, படித்துக் கொண்டிருக்கிற வாத்தியார் தான், மாணவர்களுக்கு தேவை என்பதை, இப்படம் எடுத்துச் சொல்லும்.
யாரெல்லாம் நடித்து உள்ளனர்?
சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, அதுல்யாரவி, கன்னிகாரவி, யுவன், கவுசிக், ராஜஸ்ரீபொன்னப்பா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாட்டை பட இயக்குனர் அன்பழகன் இயக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து உள்ளார்.
முதல் படம் தயாரிப்பு அனுபவம் எப்படி இருந்தது?
ரொம்பவே புதுசா இருந்தது. சினிமா துறை எனக்கு புதிதல்ல. சினிமாவில், நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது.ஒவ்வொரு நாளும், 300 பேரும் இணைந்து, தங்கள் படமாக நினைத்து பணியாற்றினர். சமுத்திரக்கனி, 25 ஆண்டு கால நண்பர். படம் தயாரிப்பது குறித்து பேசிய போது, உடனே சம்மதித்தார்.
காவல்துறை சார்ந்த குடும்பத்தில் இருந்து, சினிமாவுக்கு வர காரணம் என்ன?
சின்ன வயதில் சினிமாவுக்கு சென்றால், படம் முடிந்ததும் வரமாட்டேன்; அடம்பிடித்து தியேட்டரிலேயே இருப்பேன். அங்கிருந்து என்னை அழைத்து வருவது, பெரிய போராட்டமாக இருக்கும் என, அம்மா சொல்வார். அம்மா திலகவதி, காவல் துறை அதிகாரியாக இருந்த போதே, 'சாகித்ய அகாடமி' விருது வாங்கிய எழுத்தாளர். 14 வயதில் இருந்தே, நிறைய இலக்கியவாதிகளுடன் உரையாடி வந்திருக்கிறேன். இன்றும், 'அமிர்தா' என்ற பத்திரிகையை நடத்தி வருகிறேன். மருத்துவ துறையில், எனக்கு உள்ள நட்பு போலவே, சினிமாவிலும் நிறைய பேர் உள்ளனர். சென்னையில், சினிமா நண்பர்களுடன், இரவெல்லாம் உட்கார்ந்து கதை பேசிய டீக்கடைகள், இன்றும் நிறைய இருக்கிறது. அம்மாவுடன், உலக திரைப்பட விழாக்களுக்கு, தொடர்ச்சியாக சென்று வந்திருக்கிறேன். சினிமா மீது கொண்ட இனம் புரியாத அன்பு தான், என்னை தயாரிப்பாளராக மாற்றி இருக்கிறது.எந்த மாதிரியான படங்களை தருவீர்கள்?மக்களுக்கு ஏற்ற, நல்ல தரமான படங்களை தர வேண்டும். என் இரண்டாவது படம் வால்டர். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், செரின் கஞ்ச்வாலா நடித்துள்ளனர். சத்யராஜுக்கு, வால்டர் வெற்றிவேல் அமைந்தது போல், சிபிராஜுக்கு வால்டர் படம் மறக்க முடியாத படமாக இருக்கும்.
தயாரிப்பு தவிர, இயக்கம், நடிப்பில் ஆர்வம் உண்டா?
எதிர்காலத்தில், படம் இயக்க வாய்ப்புள்ளது. எனக்கான கதை அமைந்தால், அதற்கு நான் பொருத்தமாக இருந்தால், நடிப்பதில் தயக்கமில்லை.சினிமாவில் நம்பகத்தன்மை இல்லை என நினைக்கிறீர்களா?அப்படியெல்லாம் இல்லை. சினிமா மிக பிரமாதமான தொழில். இதில் மட்டுமே, மக்களை சந்தோஷப்படுத்தி, நாமும் நல்ல பெயர் சம்பாதிக்கிறோம். நமக்கு, சமூக அந்தஸ்தோடு, பொருளாதாரம், மனநிறைவு என, மூன்றையும் தரும் ஒரே துறை சினிமா மட்டுமே. சினிமா என்பது ஒரு பிரம்மாஸ்திரம். அதை சரியாக கையாண்டால், பல சாதனைகளை படைக்கலாம். சினிமா இல்லாத ஒரு சமூகத்தை, என்னால் கற்பனை செய்ய முடியாது. சினிமா வாயிலாக, நல்ல விஷயங்களை கொண்டு சேர்க்கலாம். மற்ற எதிலும் இப்படி முடியாது. நாம் சரியாக நடந்து கொண்டால், அனைத்துமே சரியாக நடக்கும். சினிமா மாயையோ, ஜாலியான தொழிலோ அல்ல. சினிமாவில் சிறப்பாக பயணிக்க, ஒழுக்கமும், சுயகட்டுப்பாடும், பக்தியும் தேவை. இப்படி இருந்தால் சினிமா ஒரு காமதேனு. -
-- நமது நிருபர் -