ஆர்.கே.பேட்டை:இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே பயன்படுத்தும் சாலை, பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாததால், இவ்வழியாக பயணிப்போர் கடும் அவதிப்படுகின்றனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி கிராமத்தில் வசிப்போர், தாலுகா தலைமையிடமான ஆர்.கே.பேட்டைக்கு வந்து செல்வதைக் காட்டிலும், வேலுார் மாவட்டம், சோளிங்கர் நகருக்கு சென்று வருவதே அதிகம்.ஆர்.கே.பேட்டையைவிட, சோளிங்கரில் அவர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதே இதற்கு காரணம்.அம்மனேரியில் இருந்து ஆதிவராகபுரம், பில்லாஞ்சி வழியாக சோளிங்கருக்கு தார் சாலை வசதி உள்ளது.இதில், அம்மனேரி முதல் ஆதிவராகபுரம் இடையேயான தார் சாலை, பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் கிடக்கிறது.ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காணப்படும் சாலை மார்க்கமாக பயணிக்க, பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.