திருப்பூர்:நியூ தெய்வா டிரஸ்ட் குழுவினர், திருப்பூரில் உள்ள, 27 ஆதரவற்ற முதியோருக்கு, இலவசமாக முடிதிருத்தம் செய்தனர்.இந்த அமைப்பினர், கடந்த, 19 ஆண்டுகளாக, ஆதரவற்ற முதியோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, இலவசமாக முடிதிருத்தும் சேவை செய்து வருகின்றனர்.
திருப்பூர், புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப், காலேஜ் ரோடு, பல்லடம் ரோடு, அவிநாசி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், குமரன்ரோடு, டவுன் ஹால் பகுதிகளில் இருந்த, ஆதரவற்ற முதியோருக்கு, நேற்று முடி திருத்தம் செய்தனர்.அமைப்பினர் அறங்காவலர் தெய்வராஜ், செயலாளர் சிவகாமி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், இச்சேவையை மேற்கொண்டனர். நேற்று, இரண்டு பெண்கள் உட்பட, 25 ஆண்களுக்கு, முடிதிருத்தம் செய்தனர்.
செலவிட தெரியாத பரிதாபம்!
திருப்பூர், டவுன்ஹால் அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவரிடம், 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகள் என, 3,050 ரூபாய் இருந்தது. சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை செலவிட தெரியாததால், ரூபாய் நோட்டுகள் அழுக்கு படிந்து, பயன்படுத்த முடியாத அளவுக்கு மக்கிப்போயிருந்தன.பணத்தை பத்திரப்படுத்தி கொடுத்து, தேவையான உணவு வாங்கி சாப்பிட வேண்டுமென, நியூ தெய்வா டிரஸ்ட் குழுவினர் அறிவுறுத்தி சென்றனர்.