திருப்பூர்:திருப்பூரில், மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் கே.வி.ஆர்., நகர், அய்யன் நகரை சேர்ந்தவர் நேசமணி, 52. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ெஷரீப் காலனி பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு சொந்தமான அறையில் தங்கி, டிரைவராக வேலை செய்து வந்தார். இவரை, அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். இதுதொடர்பாக, கோவில் மன்றத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,போலீசாரிடம் மனு அளித்திருந்தார்.இச்சூழலில், நேற்று மாலை, டைமண்ட் தியேட்டர் அருகிலுள்ள திருவள்ளுவர் தோட்டத்தில் உள்ள மொபைல் போன் டவர் மீது ஏறி திடீரென போராட்டம் செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சென்ட்ரல் போலீசார், தெற்கு தீயணைப்பு துறையினர் பேச்சு நடத்தினர். கீழே இறங்க மறுத்து விட்டார்.அதன்பின், தெற்கு உதவி கமிஷனர் நவீன்குமார், தாசில்தார் மகேஸ்வரன் ஆகியோர் பேச்சு நடத்திய பின், கீழே இறங்கி வந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.