திருப்பூர்,L-ஆவணங்களை சமர்ப்பித்து, நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி., ரீபண்ட் தொகையை பெற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஆர்வம்காட்ட வேண்டும் என, ஏ.இ.பி.சி., அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.மத்திய அரசு, ஆடை ஏற்றுமதியாளர்கள் செலுத்தும், ஐ.ஜி.எஸ்.டி., வரியை, திரும்ப வழங்குகிறது.
சுங்க வரியில் ஆவணங்களை சமர்ப்பித்து, ஏற்றுமதியாளர்கள் ரீபண்ட் பெறுகின்றனர்.ஏற்றுமதியாளர்கள், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கலுக்கான ரசீதுகளில், 16 இலக்க எண் பயன்படுத்து கின்றனர். அறியாமையினால், ஏற்றுமதியாளர்கள் பலர், ரீபண்ட் பெறுவதற்காக ஆவணங்களில், 20 இலக்க ரசீது எண் பயன்படுத்தினர்.
ரசீது முரண்பாடுகளால், நாடுமுழுவதும் ஏராளமான ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, ஜி.எஸ்.டி., ரீபண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பின்னலாடை நகரான திருப்பூரிலும், பெரும்பாலான ஏற்றுமதியாளர்களுக்கு ரீபண்ட் வழங்கப்படவில்லை.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஏ.இ.பி.சி.,) கோரிக்கையை அடுத்து, கடந்த, 2018 அக்டோபர் 24ம் தேதி முதல், நடப்பு ஆண்டு ஜூலை 31ம் தேதி வரையிலான ஏற்றுமதிகளுக்கு, படிவம் எண் 1 பூர்த்தி செய்து வழங்கி, ரீபண்ட் பெறலாம் என, மத்திய மறைமுக வரித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருப்பூரில் ஏராளமான நிறுவனங்கள் இன்னும், படிவம் எண் 1 பூர்த்தி செய்து வழங்காமலும்; ரீபண்ட் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் உள்ளன.இதுகுறித்து ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:ரசீது முரண்பாடு உள்ள நிறுவனங்கள், படிவம் எண் 1 பூர்த்தி செய்து வழங்கி, நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெற, சங்க வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. ரீபண்ட் வழங்கப்படாத நிறுவனங்கள் பட்டியலையும் வழங்கியுள்ளது.அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களான நிலையில், திருப்பூரில், பட்டியலில் உள்ளவற்றில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ரீபண்ட் பெறுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது, வருத்தம் அளிக்கிறது.அத்தகைய நிறுவனத்தினரை தொடர்புகொண்டு, ஆவணங்களை சமர்ப்பித்து, ரீபண்ட் பெற அறிவுறுத்தி வருகிறோம்.
சந்தேகத்துக்கு இடமான ஏற்றுமதியாளர் (ரிஸ்கி எக்ஸ்போட்டர்) பட்டியலில் உள்ள நிறுவனங்கள், வரித்துறையை அணுகி, தங்களை அந்த பட்டியலிலிருந்து விடுவிக்கவேண்டும்; அதன்பின், ரீபண்ட் பெற விண்ணப்பிக்கவேண்டும்.புதிய ஆர்டர்களை கையாளுவதற்கு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அதிகளவு நிதி தேவைப்படுகிறது. காலதாமதமின்றி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள ரீபண்ட் தொகையை பெற்று, நிதி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் ஏ.இ.பி.சி., அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.