வடகிழக்கு பருவ மழை தீவிரம்: பஞ்சலிங்கம் அருவியில் தடை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவ மழை தீவிரம்: பஞ்சலிங்கம் அருவியில் தடை

Added : நவ 29, 2019

உடுமலை:உடுமலை பகுதிகளில், நடப்பு மாதம் இயல்பை விட மழை குறைந்த நிலையில், மாத இறுதியில் மீண்டும் மழை துவங்கியுள்ளது.உடுமலை பகுதியில், பிரதானமாக உள்ள விவசாயத்துக்கு பருவ மழைகளே ஆதாரமாக உள்ளன. நடப்பு ஆண்டு, கோடை மழை, 110.8 மி.மீ., மட்டும் பெய்து, இயல்பை விட குறைந்தது. தென்மேற்கு பருவ மழை, இயல்பை விட அதிகரித்து, 218.40 மி.மீ., பெய்தது. அக்.,முதல் டிச.,வரையிலான, வட கிழக்கு பருவ மழை காலத்தில், அக்.,மாதத்தின் இயல்பான மழையளவு, 147.70 மி.மீ.,ஆக உள்ள நிலையில், கடந்த மாதம், 234.2 மி.மீ., பெய்தது.நவ., மாதத்தின் இயல்பான மழையளவு, 120 மி.மீ.,ஆக உள்ள நிலையில், நடப்பு மாதம், எட்டு நாட்கள் துாரல் மழை மட்டுமே பெய்து, நேற்று வரை, 45.60 மி.மீ.,மழை மட்டுமே கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை, உடுமலையில், 15 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. திருமூர்த்தி அணைப்பகுதியில், 9 மி.மீ.,மழையும், அமராவதி அணை பகுதியில், 5 மி.மீ., மழையும், பெதப்பம்பட்டியில், 16 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவ மழை மீண்டும், தீவிரமடைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அருவிக்கு செல்ல தடைமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாறுகளிலிருந்து, கருமை நிறத்தில் நீர் விழுந்து வருகிறது. பஞ்சலிங்கம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், நேற்று முன் தினம் மாலை மற்றும் நேற்று, சுற்றுலா பயணிகள் செல்ல, தடை விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X