மடத்துக்குளம்:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர் சம்பளம் மற்றும் நிலுவை தொகை வழங்க, அரசு, 11 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு, கணியூர், கொமரலிங்கம், நெய்க்காரபட்டி, பழநி மற்றும் ஆலை பகுதி ஆகிய ஐந்து கோட்டங்களில் இருந்து, விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏப்., மாதத்தில் தொடங்கி செப்., மாதம் வரை ஆறு மாதம் ஆலை அரவை பருவமாகும். தினசரி, 1,250 டன் அரவை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்கள் ஆலையில் உள்ளன.கடந்த, 2018ம் ஆண்டு, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதியில் 3,750 ஏக்கர் கரும்பு சாகுபடி நடந்தது. மார்ச் மாதம் தொடங்கி, கடந்த மாதம் வரை 1,26,733 டன் கரும்பு அரவை நடந்தது. இந்த ஆலை மற்றும் அலுவலகத்தில் 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். சம்பளம் வழங்குவதில் கடந்தாண்டிலிருந்து இழுபறி ஏற்பட்டது.சில மாதங்கள் நிலுவையானது. பின், போராட்டம் நடத்தி பிறகு, சமரசம் பேசி சம்பளம் கொடுத்தனர். ஆனால், மீண்டும் சம்பளம் நிலுவை ஏற்பட்டது.இதோடு, 20 மாதமாக தொழிலாளர்களுக்கு பி.எப்., பணம் இரண்டு கோடி ரூபாயும் கட்டவில்லை. இதை செலுத்தினால் தான் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் கணக்கீடு செய்யமுடியும். ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் தொகை வழங்கவில்லை. இதற்கு தீர்வாக கடன்பெற்று, நெருக்கடியை சமாளிக்க நிர்வாகத்தினர் தீர்மானித்தனர். முதற்கட்டமாக, 11 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆலை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.கோரிக்கையை ஏற்ற அரசு, 10 கோடி 99 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. இதன் மூலம், சம்பளம் பி.எப்., உள்ளிட்ட நிலுவை தொகைகள் செட்டில் செய்யப்படும். தொழிலாளர்களுக்கான பலன்கள் சீராக கிடைக்கும்.இதனால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.