பந்லுார்:நீலகிரி மாவட்ட எல்லையான சீரால் பகுதியில் புலி தென்பட்டதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தமிழக எல்லையான நம்பியார்குன்னு சீரால் பகுதியில், வாசு என்பவரின் கன்று குட்டியை புலி தாக்கியுள்ளது. காயத்துடன் ஓடிய கன்றை அங்குள்ள மக்கள் காப்பாற்றி உள்ளனர்.மேலும், நேற்று ராஜேஷ் என்பவரின் லேபர்டார் வகை நாயை வீட்டை ஒட்டிய காபி தோட்டத்தில், புலி கொன்று உட்கொண்டுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் பார்த்து, போட்டோ எடுத்து, வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.வனச்சரகர் சுனில்குமார் தலைமையிலான வனத்துறையினரும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசாரும் அங்கு வந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் கேரள மாநில எல்லையில் உள்ளதால், 'பொதுமக்களை வெளியில் நடமாட வேண்டாம்,' என, வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துள்ளனர்.மேலும், புலி தமிழக எல்லைக்குள் வந்தால், கண்காணிக்கும், பந்தலுார் பிதர்காடு வனச்சரகர் மனோகரன், வனக்காப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் இரண்டு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில்,' புலி கிராமத்தை ஒட்டி முகாமிட்டுள்ளதால், கூண்டு வைத்து பிடிக்க கேரளா வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்,' என்றனர்.