பொள்ளாச்சி:'வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளை அனைத்து விவசாய பணிகளிலும் ஈடுபடுத்துக்கூடிய வகையில், திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்,' என, குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் பயன்பெறும் சிறு, குறு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு, வேலை உறுதியளிப்பு திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் துளசிமணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மேற்கொள்ளப்படும் விவசாய பணிகள் குறித்து விளக்கப்பட்டது. பயன்பெற விரும்பும் விவசாயிகள், அனைத்து வேலை நாட்களிலும் ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.விவசாயிகள் தரப்பில், வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் பாசன கிணறு அமைத்து தர வேண்டும், மாட்டுக் கொட்டகையை பெரிய அளவில் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.மேலும், தற்போது வேலை உறுதியளிப்பு திட்டப் பயனாளிகள், மண் வரப்பு அமைத்தல், பண்ணை குட்டை வெட்டுதல், தென்னைக்கு வட்டப்பாத்தி அமைத்தல் என குறிப்பிட்ட பணிகளில் மட்டுமே ஈடுபடுகின்றனர். அனைத்து விவசாய பணிகளிலும் வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கேட்டனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை அரசுக்கு எடுத்துச் செல்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.மேலும், இது போன்ற கூட்டங்களில், திட்டத்தில் பயன்பெறும் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.