பொள்ளாச்சி:நெகமம் சுற்றுப்பகுதியில், வடகிழக்கு பருவமழையால், தென்னை மட்டைகள் விழுவது குறைந்துள்ளது. இதனால், சீமாறு தயாரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டில் சீமாறுக்கு கிராக்கியும் நிலவுவதால் விலை உயர்ந்து வருகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்னை வளம் அதிகம் காணப்படுவதால், தேங்காய் விற்பனை, கொப்பரை உற்பத்தி களங்கள் அதிகளவில் அமைந்துள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.முக்கியமாக, தென்னை ஓலைகளில் இருந்து, சீமாறு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படுகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியிலும், நெகமம், கப்பளாங்கரையிலும் சீமாறு உற்பத்தி மையங்கள் செயல்படுகின்றன.சீமாறு உற்பத்தியில், விவசாயிகள் மட்டுமன்றி, வீட்டு பெண்களும் அதிகளவில் ஈடுபட்டு வருவாய் பெறுகின்றனர்.தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையும் தீவிரமாக பெய்வதால், காய்ந்த மட்டைகள் கீழே விழுந்து ஈரமாக இருப்பதால் சேதமடைகிறது. மழை காரணமாக, தென்னை மரங்களில் இருந்து காய்ந்த ஓலைகள் விழுவது குறைந்தது.இதனால், சீமாறு உற்பத்தி தொழிலுக்கு தேவையான ஓலைகள் கிடைக்காமல், பற்றாக்குறை ஏற்பட்டது. தொழிலாளர்களும் வேலை இழந்தனர். இந்நிலையில், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சீமாறு அனுப்பப்படுவது குறைந்தது.சீமாறு மொத்த உற்பத்தியாளர் கிருஷ்ணசாமி கூறியதாவது:துாய்மை இந்தியா திட்டத்தில், இந்தியா முழுவதும் சீமாறு விற்பனை செய்யப்படுகிறது. அதில், பொள்ளாச்சி பகுதி சீமாறு, 70 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ஜன., முதல் மே மாதம் வரையிலும் தென்னை ஓலை அதிகளவில் விழும் என்பதால், சீமாறு உற்பத்தியும் அதிகம் இருக்கும். சீசன் காலத்தில், தினமும், இரண்டு லட்சம் கிலோ சீமாறு உற்பத்தியாகிறது. அதில், 60 சதவீதம் சாதாரண சீமாறு; 40 சதவீதம் டவுள் சீவல் சீமாறு. தற்போது, சீசன் இல்லாத காலத்தில், சீமாறு உற்பத்தி 50 சதவீதம் மட்டுமே உள்ளது.மழை பெய்வதால், ஈரமில்லாத ஓலைகள் கிடைப்பதில்லை. இது, சீமாறு உற்பத்தியை பாதித்துள்ளது. சீசன் காலங்களில் வாரம், 10 டன் வீதம் நான்கு லோடு சீமாறு உற்பத்தி செய்யப்பட்டு, வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது, வாரம் ஒன்று அல்லது இரண்டு லோடு மட்டுமே அனுப்பப்படுகிறது.இந்த நிலையை கருத்தில் கொண்டு, ஈரமில்லாத சீமாறு கொள்முதலுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண சீமாறு கிலோவுக்கு, இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டு, 14 ரூபாயாகவும், டபுள் சீவல் சீமாறு கிலோவுக்கு, 28 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சீமாறு ஒன்னரை அடி முதல், 4.5 அடி உயரத்துக்கு தரம் பிரித்து தயாரிக்கப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் சீமாறுகள், தரம் பிரிக்கப்பட்டு, வடமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தார்.