பொள்ளாச்சி;விவசாயிகள் பண்ணைக்கழிவுகளில் இருந்து, குறைந்த செலவில் செறிவூட்டப்பட்ட மக்கிய உரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.செயற்கை உரங்களின் அதீத பயன்பாடு, காலப்போக்கில் விளைநிலத்தின் மண் வளத்தை குறைத்துள்ளது. இதனால், விளைச்சல் சரிவை சந்திக்கிறது. இதை உணர்ந்த விவசாயிகள், இயற்கை உரங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.இயற்கை உரங்களை குறைந்த செலவில் விவசாயிகளே தயாரித்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் நன்மையாகும். இதன் மூலம் உரத்துக்கான செலவும் குறைகிறது.பண்ணைக் கழிவுகளில் இருந்து அங்கக உரம் தயாரிக்கும் முறையை வேளாண் பல்கலை வெளியிட்டுள்ளது.பண்ணைக் கழிவுகளைச் சரியான முறையில் மக்க வைத்தால், சத்துள்ள உரமாக மாற்றலாம். அதற்கு முன், அவற்றை இரண்டு முதல், 2.5 செ.மீ. கொண்டதாக நறுக்க வேண்டும். கிளைரிசிடியா, அகத்தி, தக்கைப் பூண்டு போன்ற பச்சைக் கழிவுகளையும், வைக்கோல், காய்ந்த இலைகள், காய்ந்த புற்கள் போன்ற கரிமச் சத்து அதிகமுள்ள பழுப்பு நிறக் கழிவுகளையும் சேர்த்தால் விரைவில் மக்கிவிடும்.அதேபோல, கால்நடைகள், பறவைகள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளிலும் தழைச் சத்து அதிகம் உள்ளது.மக்க வைத்தல்கம்போஸ்ட் உரக் குவியல் அமைக்க, நான்கடி உயரத்துக்கு கழிவுகளை கொட்டி, கழிவுகள் அனைத்தையும் நன்கு கலக்கி விட வேண்டும். கரிமம், தழைச்சத்து நிறைந்த கழிவுகளை மாற்றி, மாற்றி பரப்பி, இடையிடையே கால்நடைக் கழிவுகளையும் கலந்து, போதுமான அளவு நீர் தெளிக்க வேண்டும்.கழிவுகளைத் துரிதமாக மக்க வைக்க, வேளாண் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட நுண்ணுயிரிக் கூட்டுக் கலவையான 'பயோமினரலைசர்' ஒரு டன் கழிவுக்கு இரண்டு கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். திடக்கழிவு குவியலில் காற்றோட்டம் இருக்குமாறி பராமரிக்க வேண்டும்.குவியலை, 15 நாள்களுக்கு ஒருமுறை கிளறி விடவேண்டும். கழிவுகள் நன்கு மக்கியதற்கு அடையாளமாக, கழிவு கருப்பு நிறத்துக்கு மாறியிருக்கும். அதன் பின், மக்கிய உரக் குவியலை கலைத்து, சலித்து எடுக்க வேண்டும். மக்காதவற்றை மறுபடியும் உரக்குவியலில் போடலாம்.செறிவூட்டல்மக்கிய உரத்தை நிழலில், கடினமான தரையில் குவித்து, நன்மை தரக்கூடிய நுண்ணுயிர்களான, அசடோபாக்டர், அசோஸ்பைரிலம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா (0.2 சதவீதம்) ஆகியவற்றை ஒரு டன் மக்கிய உரத்துடன் கலக்கவேண்டும்.இந்த கலவையை, 20 நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க வேண்டும். இவ்வகை உரத்தில், சாதாரண மக்கிய உரத்தைக் காட்டிலும் ஊட்டச் சத்தும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களும் அதிகமாக இருக்கும். இவ்வாறு, வேளாண் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.