உடுமலை:மருத்துவ குணம் மிக்க, பெருநெல்லியை மலைத்தொடரிலும், சாகுபடி செய்து, அதிக விளைச்சல் பெற்று மறையூர் விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.நெல்லி வகைகள் அனைத்துமே மருத்துவ குணம் மிக்கதாகும். வைட்டமின் 'சி' அதிகமுள்ள நெல்லிக்காய் பல்வேறு மருந்துகள் தயாரிப்புக்கும் பயன்படுகிறது. எனவே, பணப்பயிர் அடிப்படையில், சமவெளிப்பகுதியில் பெருநெல்லி மரங்களை பராமரிக்கின்றனர். வெப்பமண்டல பகுதியிலும் தற்போது இச்சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.'பெருநெல்லி அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது. வடிகால் திறனுள்ள வளமாக மண்வாகு மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை, 6.5 முதல் 9.5 வரை தாங்கி வளரும். இதன் வளர்ச்சி, 7 முதல் 8.5 வரையிலான கால அமிலத்தன்மை கொண்ட மண்ணில் துரிதமாக வளரும்,' என கோவை வேளாண் பல்கலை சாகுபடி வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.அதன்படி, வேளாண் பல்கலையின், பி.எஸ்.ஆர்., 1 சாக்கியா, என்.ஏ.,7 கிருஷ்ணா, காஞ்சன் போன்ற ரகங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன.மறையூரிலும் செழிப்பு சமவெளிப்பகுதி மட்டுமல்லாது, மறையூர் மலைத்தொடரிலும், பெருநெல்லி சாகுபடியில், அப்பகுதி விவசாயிகள் அசத்தி வருகின்றனர். தண்ணீர் வசதி குறைவாக, சமனில்லாத நிலப்பரப்பில், பெருநெல்லி மரங்களை பராமரிக்கின்றனர். இரு சீசன்களில், காய்களை பறித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது, கிலோ, 20 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. நெல்லிக்காய்கள், கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும், தேனி உட்பட பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்படுகிறது.தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:பெருநெல்லிக்கன்றுகள் நட்டு, இரண்டாமாண்டு, முதல் வளர்ச்சி வேகமாக இருக்கும். தரைமட்டத்திலிருந்து சுமார், 3 அடி உயரத்திற்கு பக்கக் கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது வெட்டிவிடவேண்டும். சூரிய ஒளி நன்குபடும் வகையில், நான்கு புறமும், கிளைகள் சரியான இடைவெளியில் படருமாறு பார்த்து கொள்ளவெண்டும்.குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிளைகள் மற்றும் காய்ந்த, நோய் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவேண்டும். நெல்லியில் ஒவ்வொரு மகசூல் எடுத்த பின்னர் கிளைகளின் நுனியல் இருந்த சுமார் 10 செ.மீ., நீளம் விட்டு வெட்டி விடுவதன் மூலம் புதுத்தளிர்கள் அதிகமாகத் தோன்றி அதிக பூக்கள் உருவாகும்.இவ்வாறு, தெரிவித்தனர்.