வால்பாறை;வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், முதல்வர் சிறப்பு குறைதீர் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா உள்பட பல்வேறு அரசு திட்டங்களுக்கு, 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.முகாமில், 1,249 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி தலைமை வகித்தார். வால்பாறை கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் வரவேற்றார். விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி, வனவிலங்கு மனித மோதலை தடுக்க, 51 இடங்களில் நகராட்சி சார்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார். அமைச்சர் பேசியதாவது:வால்பாறை டான்டீ தொழிலாளர்களுக்கு முதல்வர் அறிவித்தபடி, தினக்கூலி உயர்வு 12.50 ரூபாய் ஒரு வாரத்தில் வழங்கப்படும். தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் விரைவில் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.தொழிலாளர்களின் வசதிக்காக தொகுப்பு வீடுகள் விரைவில் கட்டப்படும். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தாவரவியல் பூங்கா, படகுசவாரி துவங்கப்படும்.தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, ஐந்து கோடியே, மூன்று லட்சத்து, 79 ஆயிரத்து, 492 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, பேசினார்.விழாவில், கலெக்டர் ராஜாமணி, முன்னாள் எம்.பி., மகேந்திரன், முன்னாள் அமைச்சர் தாமோதரன், பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், நகராட்சி கமிஷனர் (பொ) சரவணபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.