திருப்புத்துார்: திருப்புத்துாரில் அரசு அலுவலர்களாலும், விவசாயிகளாலும் புறக்கணிக்கப்பட்டு குப்பை மேடாக மாறிய கண்மாய், 40 ஆண்டுக்கு பின் கலெக்டர் நடவடிக்கையால் மீண்டும் கண்மாய் உருவாக்கப்பட்டுள்ளன.திருப்புத்துார், சிவகங்கை ரோட்டில் பணியாரேனேந்தல் கண்மாய் இரட்டை கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு போதிய நீர் வரத்தின்றி ஆயக்கட்டுதாரர்கள் விவசாயம் செய்யாமல் விட்டதால், கண்மாய் புறம்போக்கில் துணை மின்நிலையம் உட்பட அரசு குடியிருப்புகள் உருவானது. எஞ்சிய பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டன. இக்கண்மாய் பராமரிப்பு பணி முற்றிலும் நடக்காததால், ஆக்கிரமிப்பு அதிகரித்து கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாமல் போனது.கலெக்டர் ஜெயகாந்தன், இந்த ஒன்றியத்திற்கு 3 மண் அள்ளும் இயந்திரங்களை வழங்கி, கண்மாய், வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அதன்படி புதுக்கண்மாய் துார்வாரி, முட்செடிகளை அகற்றினர். தொடர் நடவடிக்கையால் குப்பை மேடாக இருந்த இடம், கண்மாய் நிலைக்கு மீண்டும் வருகிறது. 40 ஆண்டுக்கு பின் குப்பை மேடுகளால் காணப்பட்ட இடம், கண்மாயாக உருவெடுத்துள்ளன. அதே நேரம் இந்த இடத்தில் அள்ளிய குப்பையை வெளியில் கொண்டு செல்லாம, கரையிலேயே போட்டுள்ளனதாக புகார் எழுந்துள்ளது. கலெக்டரின் நடவடிக்கையால் கண்மாய்கள் புனரமைக்கப்பட்டு வருவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.