அன்னுார்:சார் பதிவாளர் அலுவலகத்தில் நில விற்பனையை பதிவு செய்தாலும், வருவாய் துறையில் பட்டாவை வாங்கியவர்கள் பெயருக்கு மாறுதல் செய்தால்தான், வங்கி கடன் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் பயனாக இருக்கும்.இதற்காக தினமும் அதிக அளவில், அன்னுார் தாலுகாவில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதில், ஏதாவது ஒரு காரணத்திற்காக இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.பசூர் மக்கள் கூறியதாவது:பட்டா மாறுதல் செய்வதற்காக, கடந்த அக்., முதல் வாரத்தில் விண்ணப்பித்தோம். விண்ணப்பித்து, ஏழு வாரங்கள் ஆகி விட்டன. இதுவரை பட்டா மாறுதல் செய்து தரவில்லை. சிறு, குறு விவசாயிகள் சான்று, வங்கி கடன் என, பலவற்றுக்கு பட்டா மாறுதல் செய்து தர வேண்டி உள்ளது.இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் நேரடியாக சென்று நினைவூட்டினாலும், தருவதில்லை. பல்வேறு பணிகள் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் தாலுகா அலுவலகத்திற்கு, வாரக்கணக்கில் நடக்க வேண்டி உள்ளது.அதிகாரிகள் பட்டா மாறுதலுக்கு மக்கள் விண்ணப்பித்தால், இரு வாரங்களுக்குள் உத்தரவு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.