அன்னுார்:அன்னுார் மக்களின், 25 ஆண்டு கால கோரிக்கையான, கிழக்கு புறவழிச்சாலைக்கு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, நேற்று, நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மேட்டுப்பாளையம் அவிநாசி நெடுஞ்சாலைக்கும், அன்னுார் மையமாக உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் அன்னுார் வழியாக, சத்தி, பண்ணாரி மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்கின்றன.கிழக்கு மாவட்டங்களிலிருந்து, ஏராளமான வாகனங்கள் அன்னுார் வழியாக, நீலகிரி மாவட்டத்திற்கு செல்கின்றன. இதனால், தினமும் காலை, மாலையில், அன்னுார்நகரில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்கு தீர்வாக, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், புறவழிச்சாலை அமைக்க, அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், 25 ஆண்டுகளாக போராடி வந்தன.இந்நிலையில், கோவை ரோட்டில், அன்னுாருக்கு, நான்கு கி.மீ., முன் உள்ள கரியாம்பாளையத்தில் துவங்கி, ஆலாம்பாளையம், சொக்கம்பாளையம், நாகமாபுதுார், சாணாம்பாளையம் வழியாக, சத்தி ரோட்டை, அய்யப்பரெட்டிபுதுார் பிரிவில் அடையும்படி, மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது, 8.5 கி.மீ., தொலைவுக்கு, 150 அடி அகலத்தில் அமைய உள்ளது. இதற்காக 92 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. கையகப்படுத்தப்பட உள்ள நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று அன்னுார், தாசபளஞ்சிக மண்டபத்தில் நடந்தது. தாசில்தார் சந்திரா முன்னிலை வகித்தார்.மாநில நெடுஞ்சாலை (திட்டங்கள்) துறை அதிகாரிகள் பேசுகையில், 'கையகப்படுத்தப்படும் நிலம், கிணறு, கட்டடங்களுக்கு, அரசு விதிகளின்படி இழப்பீடு வழங்கப்படும். இந்த நெடுஞ்சாலை திட்டத்தால், பல லட்சம் பேர் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேசுகையில், 'அன்னுார் கடைவீதிக்கு, 100 மீட்டர் தொலைவு வரை, ரோடு 100 அடி அகலம் உள்ளது. அன்னுார் கடைவீதி, சத்தி ரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்து விடும். புறவழிச்சாலை அமைக்க தேவையில்லை. விவசாயத்தை அழித்து, பாதை அமைப்பது தேவையற்றது.ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் அல்லது உயர்மட்ட மேம்பாலம் அமைக்கலாம். நாங்கள் நிலத்தை தர மாட்டோம்' என்றனர்.ஒரு சில விவசாயிகள், 'நெடுஞ்சாலைக்கு நிலம் தருவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் சந்தை விலையில் இரண்டு மடங்கு தர வேண்டும். பல தலைமுறையாக வாழ்ந்த நிலத்தை விட்டு தரும் விவசாயிக்கு அதற்கு ஏற்ற இழப்பீடு தர வேண்டும்' என்றனர்.சில விவசாயிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு, 'நிலத்தை கையகப்படுத்தக்கூடாது' என, வாக்குவாதம் செய்தனர். உதவி கோட்ட பொறியாளர் சுஜாதா உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.ஓராண்டாக முடங்கி இருந்த கிழக்கு புறவழிச்சாலை திட்டத்திற்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதால் நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என அன்னுார் மக்கள்மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.அரசுக்கு அறிக்கை'விவசாயிகள் பலர், சாலைக்கு ஆதரவு தெரிவித்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளோம். அன்னுார், அ.மேட்டுப் பாளையத்தில் கையகப்படுத்தஉள்ள நிலங்கள் பட்டியலை வருவாய் துறை பரிசீலித்து வருகிறது' என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.