அன்னுார்;அன்னுார் நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு பெண் நேற்று மாலை, மேட்டுப்பாளையத்தில், அரசு பஸ்சில் ஏறி, அன்னுாருக்கு, மூன்று கி.மீ., முன்னதாக உள்ள குருக்கிளையம் பாளையத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார்.'அங்கு பஸ் நிற்காது. அன்னுாரில் தான் இறங்க வேண்டும்' என, கண்டக்டர் கூறியுள்ளார். இந்த தகவலை, அந்த பெண் தனது கிராம மக்களுக்கு மொபைல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, நல்லிசெட்டிபாளையம் மக்கள் மாலை 6:30 மணிக்கு, குருக்கிளையம்பாளையத்தில் திரண்டு பஸ்சை சிறைபிடித்தனர். சாலை மறியலும் செய்தனர்.'மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர், குருக்கிளையம் பாளையத்தில் அனைத்து பஸ்களும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என, உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் சர்வீஸ் பஸ்கள் இதை பின்பற்றுவதில்லை' என, மக்கள் புகார் தெரிவித்தனர். அன்னுார் போலீசார், மக்களிடம் பேசி, மறியலை கைவிடச் செய்து, அரசு பஸ்சை விடுவித்தனர்.