பொது செய்தி

தமிழ்நாடு

வட்டி கட்டியே காலம் ஓடுது; குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்

Added : நவ 29, 2019
Advertisement

விருதுநகர்: பயிர் காப்பீடு தொகை எப்போது தருவீர்கள். வட்டி செலுத்தியே காலம் ஓடுகிறது' என விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக் கூட்டத்திற்கு கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களின் கீழ் 4 பேருக்கு கொத்தமல்லி, சின்ன வெங்காயம், பல்லாரி விதைகள், மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் வழங்கப்பட்டது.

டி.ஆர்.ஓ., உதயக்குமார், வேளாண் இணை இயக்குனர் அருணாச்சலம், இணைப்பதிவாளர் திலிப்குமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் உள்ளிட்ட பல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

விவசாயிகள் விவாதம்:முருகன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): இன்சூரன்ஸ் கம்பெனிகள் 3 மாதத்தில் கொடுக்க வேண்டிய தொகையை இதுவரை வழங்கவில்லை.உமாச்சந்திரன்(கோட்ட மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி): நெல்லுக்கான இழப்பீடு வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அத்தொகை செலுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள பயிர்களுக்கான காப்பீட்டு தொகை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் வங்கி கணக்கு விவரங்கள் இணைப்பதில் பிழை ஏற்படுகிறது. இதனாலும் சிலருக்கு தொகை வருவதில் தாமதம் ஏற்படுகிறது. 2018-19ல் ரூ.34 கோடி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மக்காச்சோளம், பருத்திக்கு வழங்கப்படும்.சுப்பாராஜ் (விவசாயி, ராஜபாளையம் ): இன்சூரன்ஸ் நிறுவனம் ஒராண்டாக இதே பதிலைதான் கூறுகிறது. விவசாயி நாட்டின் முதல் குடிமகன் என்கிறீர்கள். ஆனால் மாதம்தோறும் 10க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் பதில் தர மறுக்குறீர்கள். மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.முருகன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): விரைவில் அளிப்பீர்கள் என்பதை உறுதியாக கூற முடியுமா...? வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. பாதிக்கப்பட்ட காலத்தில் நிவாரணம் வழங்கி விவசாயிகளை காப்பாற்றுவதற்கு தான் பயிர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. எங்களால் குறைதீர் கூட்டத்தில் தான் இன்சூரன்ஸ் அதிகாரிகளிடம் பேச முடிகிறது. மற்ற நேரங்களில் எங்களை சந்திக்க மறுக்கின்றனர்.கலெக்டர் : இது மானாவாரி நிலம். இங்கு நெல் விளைவிக்க வாய்ப்பில்லை. விவசாயிகள் கடனாளி என்ற நிலைக்கு மாறுவது வேதனை அளிக்கிறது. டெல்டா விவசாயிகள் ரூ.10 ஆயிரம் பாதிப்பிற்கே சிரமப்படுவார்கள் என்றால் நம் மாவட்டத்தில் ரூ.100க்கே திணறுவர். மேலதிகாரிகளிடம் பேசி விரைவில் பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுங்கள்.(அப்போது விவசாயிகள் கைதட்டி ஆரவாரம் செய்ய, கலெக்டரோ ''இது ஓன்றும் பொதுக்கூட்டம் அல்ல''என்றார்.கோபாலகிருஷ்ணன் (விவசாயி, நரிக்குடி ): நரிக்குடி விவசாயிகள் விவசாயம் செய்வதையே விட்டுவிட்டனர். கடந்தாண்டு பெரும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. எங்கள் பகுதிகளான அத்திக்குளம், சொரிக்குளத்தில் பயிர்க்காப்பீடு செய்யப்படவே இல்லை. இந்தாண்டு மனமில்லாமல் செய்துள்ளோம்.ரவி(வேளாண் தரக்கட்டுபாட்டு அலுவலர்) : மகசூல் கணக்கிடும் முறையால் வருவாய் கிராமங்களில் நல்ல விளைச்சல் இருக்கும் பட்சத்திலும் பயிர் காப்பீடு வழங்கும் வாய்ப்பு குறைகிறது.கலெக்டர்: அத்திக்குளம், சொரிக்குளம் பகுதிகளை வேளாண் இணை இயக்குனர் நேரில் பார்வையிடுவார்.அம்மையப்பன் (தமிழக விவசாயிகள் சங்கம்): தமிழகத்தில் பன்றிகளை சுட 11 மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு அனுமதி பெற்று தர வேண்டும். பல்வேறு இடங்களில் பன்றிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். மேலும் தென்னைகளில் குரங்குகள் அட்டகாசமும் தாங்கவில்லை.கலெக்டர் : பயிர்கள் பாதிப்பு ஏற்படுத்தும் வனவிலங்குகளை கட்டுப்படுத்துவது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.ராமச்சந்திர ராஜா (தமிழக விவசாயிகள் சங்கம்): கரும்பு விவசாயிகளுக்கு தரணி சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதல் செய்யப்பட்ட நிலுவை தொகை இன்று வரை வழங்கவில்லை. ஒராண்டிற்கு மேலாகிறது. வட்டியும் கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறோம்.கலெக்டர் : ஆலை நிர்வாகத்தை அழைத்து பேசி நிலுவை தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கபடும். தனுஷ்கோடி (விவசாயி, திருச்சுழி): திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் 1,100 பட்டாவில் 100 பட்டா மட்டுமே தனி பட்டா, மீதம் ஆயிரம் பட்டா கூட்டுப்பட்டாவாக உள்ளது. இதனால் எங்களை போன்ற பிற நிலங்களில் விவசாயம் செய்வோருக்கு இ--அடங்கல் பெற முடியாமல் தவிக்கிறோம். பயிர்க்காப்பீடு போன்ற அரசு திட்டங்களில் விண்ணப்பிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.கலெக்டர் : கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகள் : மாவட்டத்தில் 400க்கு மேற்பட்ட கண்மாய்கள் உள்ளது. 10க்கு குறைவான கண்மாய்கள் மட்டுமே நிறைந்துள்ளது. காரணம் அந்த கண்மாய்களில் மட்டும் குடிமராமத்து பணி நன்றாக நடந்துள்ளது. மீதமுள்ள கண்மாய்களில் குடிமராமத்து பணி முறையாக நடக்கவில்லை. நீர்வரத்து கால்வாயை துார்வாரவே இல்லை. இப்படியிருந்தால் எப்படி மழை நீர் கண்மாயில் சேகரமாகும்.கலெக்டர் : மாவட்டத்தில் இதுவரை குடிநீர் பெரும் பிரச்னையாக இருந்தது. வரும் காலகட்டங்களில் இதே பிரச்னை நீடிக்க கூடாது. ஒருங்கிணைந்த நீர்மேலாண்மை மேற்கொள்வதன் மூலம் அடுத்த பருவமழையில் நல்ல முறையில் மழைநீர் சேகரிப்பு மேற்கொள்ளலாம். அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X