புதுச்சேரி : புதுச்சேரியில், 171வது குளம் துார் வாரும் பணியை, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.'நீரும் ஊரும்' என்ற திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் உள்ள குளங்களை துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு மூலமாக மட்டுமல்லாமல், தன்னார்வல சேவை அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடனும் துார் வாரும் பணி நடந்து வருகிறது.ஒவ்வொரு குளமாக பார்வையிட்டு, அவற்றை துார் வாரும் பணிகளை, கலெக்டர் அருண் முடுக்கி விட்டுள்ளார். பணிகளின் முன்னேற்றம் குறித்து, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் தினசரி ஆய்வு நடத்தி வருகிறார்.புதுச்சேரியில், நேற்று முன்தினம் வரை, 170 குளங்கள் துார் வாரப்பட்டுள்ள நிலையில், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்தில் அமைந்துள்ள தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள குளத்தை துார் வாரும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், குளம் துார் வாரும் பணியை துவக்கி வைத்தார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவிப் பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் பாலமுருகன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.தொண்டமாநத்தம் குளம், லட்சுமிநாராயணசாமி மருத்துவக் கல்லுாரியின் உதவியுடன் துார் வாரப்பட உள்ளது. இது, புதுச்சேரியில் துார் வாரப்படும் 171வது குளம் என்றும், மழை தீவிரமடைவதற்கு முன், மேலும் பல குளங்களை துார் வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என, கலெக்டர் அருண் தெரிவித்தார்.