காரைக்கால் : விபத்து இழப்பீடு வழங்காததால், காரைக்காலில் தமிழக அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
காரைக்கால் பாரதியார் சாலையை சேர்ந்தவர் சூசை மரியநாதன் மகன் ஜோசப் ஆண்டனி(60). இவர், கடந்த 26.8.2012ல், சென்னைக்கு காரில் சென்ற போது, திண்டிவனம் அருகே தமிழக அரசு பஸ் மோதி, உயிரிழந்தார்.இதுகுறித்து, காரைக்கால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.17 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, 2016ம் ஆண்டு கோர்ட் உத்தரவிட்டது. அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காததால், கோர்ட்டில் முறையிட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ரூ.22 லட்சத்து 50 ஆயிரத்து 866 இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்பிறகும் இழப்பீடு வழங்கப்படாததால், தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது.அதன்பேரில், கோர்ட் அமீனா விசுவநாதன் தலைமையில், நேற்று காரைக்கால் புது பஸ் நிலையத்திற்கு வந்த தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்சை ஜப்தி செய்து, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.